மானூர்: மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் அமைச்சர் மா.சுப்ரமணியம் நேரில் அஞ்சலி
நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ள மேல இலந்தகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ராபின்சன் (வயது 23). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 5-ந் தேதி மாலை தனது மோட்டார் சைக்கிளில் மேல இலந்த குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது , எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த ராபின்சன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், நெல்லை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்தபோதிலும் நேற்றிரவு அவர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு உறவினர்கள் முன் வந்தனர். தொடர்ந்து , ராபின்சன் உடலில் இருந்து 2 சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் கருவிழிகள் ஆகியவை தானமாக வழங்கப்பட்டது. இன்று பிற்பகலில் அவரது உடல் அரசு மரியாதையுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக , ராபின்சன் உடலுக்கு சபாநாயகர் அப்பாவு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ராபர்ட் புருஸ் எம்.பி, ரூபிமனோகரன் எம்.எல்.ஏ, கலெக்டர் சுகுமார், டீன் ரேவதி பாலன் மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது, ராபின்சனின் தாயார் ஏசுமணி , அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம், எனக்கு ஒரே மகன் தான் . அவனும் இறந்து விட்டான் . என்க்கு இரு மகள்கள் உள்ளனர். அவர்களை கஷ்டப்பட்டு நர்சிங் படிக்க வைத்துள்ளேன். அவர்களுக்கு அரசு வேலை வழங்கி உதவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது, அங்கிருந்தவர்களை உருக செய்தது. அமைச்சர், அவரின் கோரிக்கையை கனிவுடன் கேட்டுக் கொண்டார். பின்னர், சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டு ராபின்சனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.