தென்காசியில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்குவது எப்போது? - திருநெல்வேலியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்வது என்ன?
மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகளின் உயிரைப் பறித்த, விஷத்தன்மை வாய்ந்த 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தை தயாரித்த நிறுவனம் மூடப்படுவதுடன், அதன் உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கையும் பாயும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருநெல்வேலியில் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 60-வது ஆண்டு வைர விழா நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
*வைர விழா*
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, வைர விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சட்ட பேரவைத் தலைவர் அப்பாவு முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். கடந்த 60 ஆண்டுகளில் சாதனை புரிந்த மருத்துவர்களுக்கும், முன்னாள் மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. அதோடு, நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட முனைஞ்சிப்பட்டி மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிக்குட்பட்ட பத்தமடை ஆகிய இடங்களில் புதிய ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
*அரசு மரியாதையுடன் உடல் தானம்*
உடலுறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில், உறுப்பு தானம் செய்தவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன் பயனாக, உடல் உறுப்பு தானம் அதிகரித்துள்ளது. உறுப்பு தானத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில், இன்று இங்கு விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ராபின்சன் (வயது 23) என்ற இளைஞரின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
*இருமல் மருந்து விவகாரம்*
மத்தியப் பிரதேச மாநிலம், சிந்துவாரா மாவட்டத்தில் குழந்தைகள் மரணத்திற்கு தொடர்புடையதாகக் கருதப்படும் 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து குறித்து, மத்திய அரசிடமிருந்து கடந்த 1-ம் தேதி எங்களுக்கு அவசர கடிதம் கிடைத்தது. கடிதம் கிடைத்த உடனேயே, அந்த மருந்தின் விற்பனைக்குத் தடை விதித்தோம். தமிழ்நாடு அரசு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) மூலம் அந்த மருந்து கொள்முதல் செய்யப்படவில்லை என்றாலும், தனியார் விற்பனைக்கும் உடனடியாகத் தடை விதிக்கப்பட்டது.
கடந்த 3-ம் தேதி, அந்த நிறுவனத்திற்கு 'உற்பத்தியை நிறுத்துமாறு' (Stop Production Order) உத்தரவு வழங்கப்பட்டது. அத்துடன், "விஷத்தன்மை வாய்ந்த மருந்தை தயாரித்ததற்காக உங்கள் நிறுவனத்தை ஏன் மூடக்கூடாது?" எனக் கேட்டு நோட்டீசும் வழங்கப்பட்டது.
தொடர்ச்சியாக, நேற்று (7-ம் தேதி), "உங்கள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கூடாது?" என்று கேட்டு மற்றொரு நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் பதில் எதுவாக இருந்தாலும், சட்டப்படி உரிமத்தை ரத்து செய்து, நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
இருமல் மருந்தில், டை எத்திலீன் கிளைக்கால் என்ற நச்சு ரசாயனம் ஒரு சதவீதம் கூட இருக்கக் கூடாது. ஆனால், 48% வரை கலந்திருப்பது பெரும் குற்றம். இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் 48 மணி நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு, புதுச்சேரி, ஒடிசா போன்ற மாநிலங்களையும் எச்சரித்ததால், அங்கு பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
*டெங்கு பாதிப்பு*
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுவது சரியல்ல. இந்த ஆண்டு இதுவரை சுமார் 15,000 பேர் பாதிக்கப்பட்டு, 8 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் பெரும்பாலும், டெங்குவுடன் சேர்ந்து இதர இணை நோய்கள் இருப்பதாலேயே நிகழ்கின்றன. 2012 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 65-க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்ந்தன. ஆனால், இப்போது எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், கடந்த 5 ஆண்டுகளாக இறப்புகளும், பாதிப்புகளும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.
*புதிய மருத்துவக் கல்லூரிகள்*
தென்காசி, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். முதலமைச்சர் பிரதமரிடமும், நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடமும் நேரடியாகக் கோரிக்கை வைத்துள்ளோம். பரிசீலிப்பதாகக் கூறியுள்ளனர், பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.
*திருநெல்வேலி மருத்துவமனை*
திருநெல்வேலி மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு வசதியில்லை என்பது போன்ற தகவல்கள் சரியல்ல. புற்றுநோய் கண்டறியும் 'பெட்-சிடி' கருவி உட்பட பல நவீன உபகரணங்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர்களை நியமித்து, அந்த வசதியும் மிக விரைவில் இங்கு நடைமுறைப்படுத்தப்படும். இந்த மருத்துவக் கல்லூரியில் மட்டும் தற்போது 80 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.