செத்தவங்களுக்கு அள்ளி கொடுக்குறீங்க, எங்களை உயிரோட கொல்லுறீங்க - ரேசன் பொருள் மறுப்பால் மாஞ்சோலை மக்கள் கதறல்

வேலை இழந்து, வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் தங்களுக்கு ரேஷன் பொருட்களையும் வழங்க மறுப்பதாகக் கூறி, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ரேஷன் கடை ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கடையையும் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிர்வாகத்தால் மூடப்பட்டுள்ளது . இதனால் அங்கு நான்கு தலைமுறைகளாகப் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய VRS தொகை, வருங்கால வைப்பு நிதி (PF) உள்ளிட்ட எந்தப் பணமும் இதுவரை வழங்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

*சோற்றுக்கே அல்லாட்டம்*

வேலை இல்லாததால், பல தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளுடன் மலைப்பகுதியிலிருந்து கீழே இறங்கி, சமவெளிப் பகுதிகளில் கிடைக்கும் கூலி வேலைகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில், மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இன்று பொருட்கள் வாங்கச் சென்ற தொழிலாளர்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

*அதிகாரிகளுடன் வாக்குவாதம்*

"நீங்கள் தற்போது இங்கு வசிக்கவில்லை, சமவெளிப் பகுதிக்குச் சென்றுவிட்டீர்கள். எனவே உங்களுக்கு இங்கு ரேஷன் பொருட்கள் வழங்க முடியாது," என அதிகாரிகள் கூறியதாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், அதிகாரிகளைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

பெண் ஒருவர், "எங்களுக்கு புருஷன் இல்லை, பிள்ளைகளும் இல்லை. பாதி பேர் புருஷன் இல்லாதவங்கதான். கூலி வேலை பார்த்துதான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். ஊருக்குள்ள இருக்கிற ரேஷன் கடைக்கு போனா, 'உங்க ரேஷன் கார்டு அங்கேதான் இருக்கு, அங்கதான் வாங்கணும்'னு சொல்றாங்க. இங்க வந்தா நீங்க தரமாட்டேன்னு சொல்றீங்க. அப்போ நாங்க என்னதான் சார் செய்யுறது?" என்று கண்ணீருடன் கேள்வி எழுப்பினார்.

மற்றொரு பெண் , "நாங்கள் அஞ்சு தலைமுறையா இந்த இடத்தில் இருந்தவங்க. இப்போ எங்களை வெளியேற்றிட்டாங்க. நீங்க அரிசி இல்லைன்னு சொன்னா, இது என்ன நியாயம்? எங்களை இங்கேயும் இல்லாமல், அங்கேயும் இல்லாமல் அலைக்கழிக்கிறீங்க," என்று ஆவேசப்பட்டார்.

*அட்டைகளை எரிப்போம் என எச்சரிக்கை*

தொடர்ந்து பேசிய தொழிலாளர்கள், "எங்களுக்குப் பொருட்கள் கொடுக்க முடியாதுன்னா, அதை எழுதிக்கொடுங்க. நாங்க கலெக்டர் ஆபீஸ் முன்னாடி எங்க ரேஷன் கார்டு, ஆதார் கார்டு எல்லாத்தையும் எரிச்சிட்டு, அகதியாவே இருந்துக்கிறோம். கம்பெனிக்காரன் எங்களைக் காட்டுல விரட்டி விட்டுட்டான். இத்தனை வருஷமா இருந்த எங்களை அரசாங்கம் ஏன் ஏறெடுத்துப் பார்க்கல? செத்தவங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறீங்க, உயிரோட இருக்க எங்களைக் கொல்லுறீங்களே," என ஆக்ரோஷத்துடன் கூறினார்.

இதுகுறித்து நாலுமுக்கு எஸ்டேட்டைச் சேர்ந்த தொழிலாளி சக்திவேல் கூறியதாவது:

"நாங்கள் நான்கு தலைமுறையாக இங்கு வேலை பார்த்தோம். ஒன்றரை வருடமாக எஸ்டேட் மூடப்பட்டுள்ளதால் வேலையில்லை. எங்களுக்கு வரவேண்டிய எந்தப் பணமும் வரவில்லை. அரசு தரப்பிலிருந்தும் எந்த நிவாரணமும் கொடுக்கவில்லை. பலருக்கு அரசின் மகளிர் உரிமைத்தொகை கூட கிடைக்கவில்லை.

எங்களுடைய ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, ஓட்டர் ஐடி என எல்லாமே எஸ்டேட் முகவரியில்தான் இருக்கிறது. கடந்த வாரம் கூட பூத் கமிட்டி அதிகாரிகள் இங்கு வந்து எங்களையெல்லாம் சரிபார்த்துவிட்டுப் போனார்கள். வரப்போகிற தேர்தலிலும் நாங்கள் இங்குதான் ஓட்டுப் போட வேண்டும். ஆனால், ரேஷன் பொருள் மட்டும் கீழே போய் வாங்கிக்கோங்க என்றால் எப்படி முடியும்? நாங்கள் தினக்கூலிக்காக திருநெல்வேலி, தென்காசி என்று சிதறிக்கிடக்கிறோம். ஒரு நாள் ரேஷனுக்காக எப்படி மலையேறி வர முடியும்?

வேலையில்லாமல் சோற்றுக்கே கஷ்டப்படும் நேரத்தில், ரேஷன் அரிசியை வைத்துதான் கஞ்சி குடித்து உயிர் வாழ்கிறோம். அதையும் கொடுக்க மாட்டேன் என்று சொன்னால் நாங்கள் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? பட்டினியாக இருந்தாலும் எஸ்டேட்டில்தான் சாக வேண்டும் என்கிறார்களா? மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் தலையிட்டு, நாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே ரேஷன் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்." என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு தரப்பில் விளக்கம்

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்பட்டது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் விளக்கம் கேட்டபோது , "அங்கு தற்போது 15 பேர் மட்டுமே வசித்து வருவதாகவும் ரேஷன் பொருள்களை தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்களின்படி எங்கிருந்தாலும் வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் பொருள்களை வாங்குவதற்கு சமவெளி பகுதியில் இருந்து மாஞ்சோலை கோத்து பகுதிக்கு அல்லது நாலுமூக்கு பகுதிக்கோ சிரமப்பட்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்கின்றனர்.

More News >>