தீபாவளி பண்டிகை பலகாரங்களை செய்தித்தாளில் பொட்டலமிட்டால் ..நெல்லை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரிக்கை
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, நெல்லை மாவட்டத்தில் இனிப்பு, காரம் உள்ளிட்ட உணவுப் பொருட்களை செய்தித்தாள்களில் பொட்டலமிட்டு வழங்கும் வியாபாரிகளுக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் புஷ்பராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விதவிதமான இனிப்பு பலகாரங்கள், கார வகைகள் மற்றும் கேக் போன்ற உணவுப் பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பதும், சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கி மகிழ்வதும் வழக்கம்.
இந்த சூழலில் வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி புஷ்பராஜ் ல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அதில், தீபாவளி பண்டிகை இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து விற்பனை செய்யும் அனைத்து தயாரிப்பாளர்களும் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொது மக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இனிப்பு காரவகைகள் மற்றும் பேக்கரி பொருட்களின் மூலப்பொருட்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தரமான முறையில் கலப்பிடமில்லாது தயாரித்து பாதுகாப்பான முறையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும், செய்தித்தாள்களில் உணவுப்பொருட்களை பொட்டலம் போட்டு கொடுக்கக்கூடாது. உணவுப்பொருட்களை வைப்பதற்கும் செய்தித்தாள்களை பயன்படுத்தக்கூடாது . செய்தித்தாள்களில் உணவுப்பொருட்களை வழங்கக்கூடாது
செய்தித்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்படும் மையில் உடலுக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன. குறிப்பாக, சூடான, எண்ணெய் பசை நிறைந்த பலகாரங்களை செய்தித்தாள்களில் வைத்து வழங்கும் போது, இந்த ரசாயனங்கள் உணவுடன் கலந்து, மனித உடலுக்குள் சென்று உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, உணவுப் பொருட்களை செய்தித்தாள்களில் வழங்குவதற்கு தடையுள்ளது.
இனிப்பு மற்றும் கார வகைகளை செய்தித்தாளில் கொடுக்கக் கூடாது என்ற தடை குறித்து நெல்லை மாவட்ட வியாபாரிகளிடம் பலமுறை அறிவுறுத்தியுள்ளோம். தடையை மீறியவர்கள் மீது திடீர் ஆய்வுகள் நடத்தி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், இது தொடர்பாக நெல்லையில் வியாபாரிகளுடன் பிரத்யேக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, விதிமுறைகள் மீண்டும் தெளிவுபடுத்தப்பட்டன. தடையை மீறி செய்தித்தாளில் உணவுப் பலகாரங்கள் கொடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக ரூ.5000 வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் சூடுபடுத்தி உபயோகிக்கக் கூடாது.
பொட்டலங்களில் விற்கப்படும் பொருட்களின் மீது, அதன் தயாரிப்பாளர் முகவரி, தயாரிப்புத் தேதி, காலாவதியாகும் காலம் போன்ற விவரங்கள் அடங்கிய தகவல்கள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் வியாபாரிகள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.