அம்பானியின் மகனைத் தொடர்ந்து மகளுக்கும் திருமணம்- களைகட்டும் மும்பை!
அம்பானியின் இரட்டைக் குழந்தைகளுக்கும் ஒரு மாதத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இந்தியாவையே ஒரே குடும்பம் கைக்குள் வைத்திருக்கிறது என்றால் அது அம்பானியின் குடும்பமாகத்தான் இருக்கும். இவர்கள் தொழில் வளர்ச்சிக்காக நாட்டின் பிரதமரே விளம்பரப்படம் நடித்துக்கொடுப்பார். அவ்வளவு பிரசித்தி பெற்ற குடும்பத்தில் இப்போது கல்யாண மேளம் கொட்டப்போகிறது.
முகேஷ் அம்பானி - நிடா அம்பானி தம்பதியருக்கு மூன்று குழந்தைகள். அதில் மூத்த மகனும் ரிலையன்ஸ் ஜியோ நிர்வாகக்குழு உறுப்பினருமான ஆகாஷ் அம்பானி தனது பள்ளித்தோழியான ஸ்லோகா மேத்தா என்பவரை திருமணம் செய்யவுள்ளார்.
இவர்களது திருமணம் வருகிற டிசம்பர் மாதம் ஐந்து நாள் விழாவாக மும்பையில் நடக்க உள்ளது. ஸ்லோகா மேத்தா மும்பையின் முக்கியத் தொழிலதிபர்களுள் ஒருவரான வைர வியாபாரி ரஸல் மேத்தாவின் மூன்றாவது மகள் ஆவார்.
இவர்களது திருமணம் கடந்த மாதம் நிச்சயமானது. இந்நிலையில் ஆகாஷ் அம்பானியின் இரட்டைச் சகோதரியான இஷா அம்பானிக்கும் வருகிற டிசம்பர் மாதமே திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர், நாட்டின் மிகப்பெரும் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ஆனந்த் ப்ரமிளை மணக்க உள்ளார்.
குடும்ப நண்பரான ஆனந்த் ப்ரமிள், முன்னாள் ஹார்வர்டு மாணவர் ஆவார். இவரது பெற்றோர் ரியல் எஸ்டேட் தொழில் மிகப் பெரும் புள்ளிகளாக உள்ளனர்.
தனது இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரே மாதத்தில் திருமணம் நிச்சயித்துள்ள முகேஷ் அம்பானி, ஒரே மேடையில் இத்திருமணங்களை நடத்துகிறாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் ஏதும் இதுவரையில் வெளியாகவில்லை.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com