மாஞ்சோலையில் விரைவில் மரக்கன்றுகள் நடும் பணி - முண்டந்துறை துணை இயக்குனர் அறிவிப்பு

மாஞ்சோலையில் வனப்பகுதியை விரிவுபடுத்த வல்லுநர் குழு அமைத்து ஆய்வுகள் நடத்த இருப்பதாகவும். விரைவில் மரக்கன்றுகள் நடும் பணி தொடருமென வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நெல்லை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனராக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டார் . நேற்று செய்தியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, அப்போது அவர் கூறுகையில், " வன விலங்குகளிடமிருந்து விவசாய நிலங்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் . எனினும், சமீப காலமாக கரடிகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் வருகிறது . ஒட்டுமொத்தமாக பல கரடிகள் வருவதால் , அவற்றை கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளது. ஓரிரு கரடிகள் என்றால் கூண்டு வைத்து பிடிக்கலாம் . ஆனால,10க்கும் மேற்பட்ட கரடிகள் வருவதால் கூண்டு வைத்து பிடிப்பதில் சவால்கள் உள்ளன.

காட்டுப் பன்றிகளை பிடிக்க சமீபத்தில் பிரத்தியேக கூண்டு ஒன்று தயாரிக்கப்பட்டது . காட்டுப்பன்றி நடமாட்டம் அதிகமுள்ள இரண்டு இடங்களில் கூண்டு வைக்கப்பட்ட போதிலும் காட்டுப்பன்றி எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து, காட்டு பன்றிகளை கண்காணித்து வருகிறோம் . மாஞ்சோலை பகுதியில் டீ எஸ்டேட் மூடப்பட்டு விட்டதால் , அங்கு வனப்பகுதியை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம் . புதிய மரங்கள் நடுவது போன்ற பணிகளை மேற்கொள்ளவுள்ளோம். இதற்காக , வல்லுனர் குழுவை நியமித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் . தற்போதைய நிலவரப்படி மாஞ்சோலையில் 15 குடும்பங்கள் இருக்கின்றனர் .

மாஞ்சோலையில் கடைசி நபர் இருக்கும் வரை அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்துள்ளது. அந்த உத்தரவின்பேரில், அங்கு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வனத்துறையும் மக்களும் இணைந்து செயல்பட்டால்தான் வனத்தை பாதுகாக்க முடியும். குறிப்பாக பழங்குடி மக்கள் வனத்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றார்.

More News >>