குழந்தைகளுக்கு 100 சதவிகிதம் சொட்டு மருந்து வழங்க இலக்கு - மாவட்ட ஆட்சியர் டாக்டர் இரா சுகுமார் பேட்டி

திருநெல்வேலி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் இரா .சுகுமார் தெரிவித்துள்ளார்.

*போலியோ சொட்டு மருந்து முகாம்*

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கப்பட்டது. இன்று சொட்டு மருத்து வழங்கும் நிகழ்ச்சியை கலெக்டர் இரா. சுகுமார், பாளையங்கோட்டை எம்பி. அப்துல் வகாப் ஆகியோர் தொடங்கி வைத்தன.ர பின்னர், மாவட்ட ஆட்சியர் இரா . சுகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட 1,32,124 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் 964 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெற்றோருடன் பயணத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 48 நடமாடும் குழுக்களும், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் 3 சிறப்பு முகாம்களும் செயல்பட்டு வருகின்றன.

மொத்தம் 1,86,000 டோஸ் போலியோ மருந்து கையிருப்பில் உள்ளது. இன்று ஒரே நாளில் 1,54,000 டோஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளைக் கண்டறிய அடுத்த இரண்டு நாட்களுக்கு வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தப்படும். இதன் மூலம் 100 சதவீத குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்," என்று அவர் தெரிவித்தார்.

கல்லூரி விடுதியில் மாணவர்களுக்கு ஏற்பட்ட எலிக்காய்ச்சல் பாதிப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் கூறியதாவது:

"பாதிக்கப்பட்ட கல்லூரி விடுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, புதிய தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து குளோரினேஷன் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு வழக்கமான நடைமுறைதான். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குடிநீர் விநியோகத்தில் குளோரின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால், டெங்கு போன்ற தண்ணீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் காய்ச்சிய நீரை பருக வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு தற்போது இல்லை. ஒரு மாதத்திற்கு முன்பு சில பாதிப்புகள் இருந்தன. தற்போது, கட்டுப்படுத்தப்பட்டு விட்டன. எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நலமுடன் உள்ளனர். நோய் பரவல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இதுகுறித்து எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை," என்றார்.

More News >>