நெல்லை : கைதிகளின் குடும்பத்தினருக்கு புத்தாட்டை, பட்டாசு : துணை ஆணையர் வினோத் சாந்தாராம் வழங்கினார்
சிறையில் இருக்கும் கைதிகளின் குடும்பங்களை சேர்ந்தவர்களும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் புதிய ஆடைகளும், இனிப்புகளும் நெல்லையில் வழங்கப்பட்டன. பாளையங்கோட்டையில் உள்ள காது கேளாதோர் பள்ளியில்,இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர காவல்துறை சார்பில் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் கலந்து கொண்டு பெண்கள் மற்றம் குழந்தைகளுக்கு பட்டாசுகள், இனிப்புகள், புத்தாடைகள் வழங்கினார்.
தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, " தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போதும், குடும்பத்துடன் பர்ச்சேஸ் செல்லும் போதும் பாதுகாப்பு மிக முக்கியம். பண்டிகை எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவிற்கு நமது குழந்தைகளின் பாதுகாப்பு மிக முக்கியம். குழந்தைகள் எந்த வித பட்டாசு வெடி விபத்திலும் சிக்கிக் கொள்ளக் கூடாது. குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர் உடன் இருக்க வேண்டும். எளிதில் தீப்பிடிக்கும் ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். நெல்லை மாநகருக்குள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டுள்ளனர்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறையில் இருக்கும் கைதிகளின், குடும்பங்களும் அவர்களது குழந்தைகளும் தீபாவளி கொண்டாடும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருடா வருடம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் காவல்துறை சார்பில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளோம். எந்த ஒரு சந்தோசமான கொண்டாட்டங்களும் பெண்களும் குழந்தைகளும் இல்லாமல் சிறக்காது. எனவே அவர்களும் பங்கேற்கும் வகையில் செய்யப்பட்ட ஏற்பாடு இது நெல்லை மாநகரை பொறுத்தவரை சிசிடிவி எண்ணிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறோம். மாநகர விரிவாக்க பகுதிகளில் கூடுதலாக சிசிடிவிகள் பொருத்த ஏற்பாடு செய்துள்ளோம். கல்லூரி மாணவர்களின் மோதல் என்பது பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடிய விஷயம் அல்ல. குழந்தைகளை நாம் தான் வழிநடத்த வேண்டும் "
இவ்வாறு அவர் பேசினார்.