திருநெல்வேலி முதுநிலை ஆசிரியர் தேர்வில் ஆள்மாறாட்டமா... நடந்தது என்ன?
திருநெல்வேலியில் இன்று நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில், ஆள்மாறாட்டம் செய்ய முயற்சி நடந்ததாகக் கிளம்பிய புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இது ஆள்மாறாட்ட முயற்சி அல்ல என்றும், வினாத்தாள் விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடியே குழப்பத்திற்குக் காரணம் என்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில், 2025 ஆம் ஆண்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் சேர்ப்புக்கான எழுத்துத் தேர்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. பாளையங்கோட்டை தெற்கு பஜார் சாலையிலுள்ள குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் தேர்வு நடைபெற்றது. தேர்வு நடந்துகொண்டிருந்தபோது, இந்த மையத்தில் ஆள்மாறாட்ட முயற்சி நடப்பதாக புகார் எழுந்தது. இதனால் , பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பாளையங்கோட்டை காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விவகாரம் குறித்து சம்பவ இடத்தில் நேரடியாக விசாரணை நடத்திய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார் கூறுகையில், "ஆள்மாறாட்டம் எதுவும் நடைபெறவில்லை; அது முற்றிலும் தவறான தகவல். இங்குள்ள உண்மையான பிரச்சனை என்னவென்றால், ஒரு தேர்வர் தமிழ் பாடத்திற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அவருக்கு ஆங்கிலப் பாடத்திற்கான வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. இந்த குளறுபடி எப்படி நிகழ்ந்தது என்பது குறித்தே நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்," என்று விளக்கமளித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இந்தத் தேர்வுக்காக மொத்தம் 5,527 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 5,075 பேர் மட்டுமே தேர்வில் கலந்துகொண்டனர். 452 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆரம்பத்தில் ஆள்மாறாட்டப் புகார் எனத் தகவல் பரவியதால் ஏற்பட்ட பரபரப்பு, அதிகாரியின் விளக்கத்திற்குப் பிறகு முடிவுக்கு வந்தது.