ரவுடியை கைது செய்வதா? நெல்லை தச்சநல்லூர் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பின்னணி
திருநெல்வேலி மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தச்சநல்லூர் காவல் நிலையம் மற்றும் தாழையூத்து வாகன சோதனைச் சாவடி மீது மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரவுடிகள் கைது செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கத்தில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
*சம்பவத்தின் பின்னணி:*
ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் ஊருடையான் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஹரிஹரசுதன், பிரபாகரன், ராம் சூர்யா, பாலாஜி உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல், நேற்று ஊருடையான் குடியிருப்பு காட்டுப் பகுதியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தது. இவர்கள் அனைவரும் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான கண்ணபிரான் என்பவரின் தீவிர ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.
அப்போது, தச்சநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேந்திர குமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களைக் கண்டதும் இந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு அருண்குமார் மற்றும் ஹரிஹரசுதன் ஆகிய இருவரைப் பிடித்தனர். அவர்களிடமிருந்து 5 கிராம் கஞ்சா மற்றும் ஒரு அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று (அக் 12 ) மாலை 4 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
*பழிவாங்க தாக்குதல்:*
இந்த கைது நடவடிக்கையால் ஆத்திரமடைந்த, கைது செய்யப்பட்ட அருண்குமாரின் உடன்பிறந்த சகோதரர் அஜித்குமார், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பழிவாங்கும் நோக்கத்தில் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து இன்று( அக் 12) மாலை, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், தச்சநல்லூர் காவல் நிலையத்தின் முன்பும், தாழையூத்து வாகன சோதனைச் சாவடியிலும் தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது. இதில், காவல் நிலையம் முன்பு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு, நிலையத்திற்கு எதிரேயுள்ள சிறிய கோவிலில் விழுந்து வெடித்துச் சிதறியது.
இந்தத் துணிகர சம்பவத்தால் திருநெல்வேலி மாநகரில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.
*தீவிர விசாரணை:*
தகவலறிந்ததும், திருநெல்வேலி மாநகர காவல் துறை துணை ஆணையாளர் பிரசன்ன குமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளார். அவரது தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பெட்ரோல் குண்டு வீசித் தப்பிச் சென்ற அஜித்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளைப் பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.