மானூர் அருகே மதவக்குறிச்சியில் இறந்த கோழிகளை கொட்டிச் சென்றதால் பரபரப்பு
மானூர் அருகேயுள்ள மதவக்குறிச்சி கிராமத்தில், உயிரிழந்த கோழிகளை மர்ம நபர்கள் கொட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகேயுள்ள மதவக்குறிச்சி கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில், கோழிப் பண்ணைகளில் இறந்த ஏராளமான கோழிகளை நேற்ற மதியம் கொட்டி விட்டு சென்றுள்ளனர். இதனால் , அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
மதவக்குறிச்சி கிராமப் பகுதியில் சட்டவிரோதமாகக் கழிவுகள் கொட்டப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் மருத்துவக் கழிவுகளையும் மர்ம நபர்கள் மொத்தமாகக் கொட்டிச் சென்ற சம்பவம் அரங்கேறியது.
இதன் காரணமாக, கிராம மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் காவல் துறையினரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதில், கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க அப்பகுதியில் காவல் துறையினர் ரோந்து வாகனத்தில் அடிக்கடி செல்ல வேண்டும் என்றும், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், தற்போது மீண்டும் கோழிப் பண்ணைக் கழிவுகளையும், உயிரிழந்த கோழிகளையும் மொத்தமாகக் கொட்டிச் சென்ற சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த கோழிகளை குழி தோண்டி புதைக்காமல் இப்படி கொட்டி செல்வது தொற்று நோயை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இந்தக் கழிவுகளைக் கொட்டிச் சென்ற மர்ம நபர்கள் யார், எந்தப் பண்ணையில் இருந்து இந்தக் கோழிகள் கொண்டு வரப்பட்டன என்பது குறித்து அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதவக்குறிச்சி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதாரத் துறையினர் உடனடியாக தலையிட்டு, கொட்டப்பட்டுள்ள கோழிகளை முறைப்படி அப்புறப்படுத்தவும், கிருமி நாசினி தெளித்து அப்பகுதியைச் சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.