கன்னியாகுமரி: மாணவர்களை ஏற்றாமல் ஓட விட்ட அரசு பேருந்து
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பணிமனையில் இருந்து இயக்கப்படும் 86G வழித்தட எண் கொண்ட அரசுப் பேருந்து, பள்ளி மாணவர்களை ஏற்றாமல் ஓட விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்த்தாண்டத்தில் இருந்து பேச்சிப்பாறை நோக்கிச் சென்ற 86G அரசு பேருந்து, அருமனை அரசுப் பள்ளி அருகே வந்தது. அப்போது, பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்குச் செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால், ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் வேகமாகச் சென்றார். இதனால், பேருந்தைப் ஏறுவதற்காக மாணவர்கள் நீண்ட தூரம் பேருந்தின் பின்னால் ஓடும் நிலை ஏற்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் (CCTV) தெளிவாகப் பதிவாகியுள்ளது.
பேருந்து நிற்காமல் சென்ற காட்சியும், அதற்குப் பின்னால் மாணவர்கள் ஓடும் காட்சியும் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.பள்ளி மாணவர்களின் பாதுகாப்பையும், அவசரத்தையும் கருத்தில் கொள்ளாமல், பொறுப்பின்றிச் செயல்பட்ட மார்த்தாண்டம் பணிமனையின் 86G பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.