நெல்லை நீதிமன்றத்தில் வேட்டியை அவிழ்த்த 70 வயது கைதி : ஜாமீன் கிடைக்காததால் விரக்தி
ஜாமீன் கிடைக்காத விரக்தியில் 70 வயது முதியவர் திருநெல்வேலி நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பா என்ற குண்டு செல்லப்பா ( 70), இவர் இரண்டு வெவ்வேறு வழக்குகள் (வழக்கு எண்: 303/2025 மற்றும் 306/2025) தொடர்பாக கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி முதல் விசாரணைக் கைதியாக இருந்து வருகிறார்.
இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைக்காக, இன்று அவர் திருநெல்வேலி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1-க்கு (JM 1) அழைத்து வரப்பட்டார். நீண்ட நாட்களாக சிறையில் இருப்பதால், ஜாமீன் கோரி அவர் இரண்டு முறை மனு தாக்கல் செய்தும் ஜாமீன் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. வழக்கு தொடர்பான நகல்களைப் பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டதால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், இன்று ( அக்.13)நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியபோது, ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற செல்லப்பா, திடீரென நீதிபதி முன்னிலையில் தனது வேட்டியை அவிழ்த்துள்ளார். அவரின் இந்த திடீர் செயலால் நீதிபதி, வழக்கறிஞர்கள், காவலர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள், செல்லப்பாவை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
நீதிமன்றத்தில் கண்ணியமற்ற முறையில் நடந்துகொண்டது மற்றும் நீதிபதியை அவமதித்தது ஆகிய குற்றங்களுக்காக, செல்லப்பா மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட புதிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.