நெல்லையில் சாலையில் கிடந்த ரூ.1 லட்சம்: காவல்நிலையத்தில் ஒப்படைத்த ரயில்வே கேட்கீப்பர்

சாலையில் கண்டெடுத்த ஒரு லட்சம் ரூபாயை சிறிதும் சலனமின்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்த ரயில்வே கேட் கீப்பரின் நேர்மையை அனைவரும் பாராட்டினர்.

*சம்பவத்தின் விவரம்:*

திருநெல்வேலி பேட்டை அருகே உள்ள கல்லூரைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 39). இவர், அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட்டராகப் பணியாற்றி வருகிறார். நேற்று, தனதுவேலை காரணமாக திருநெல்வேலி சந்திப்புப் பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். வேலையை முடித்துவிட்டு, மீண்டும் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். ஸ்ரீபுரம் அருகே வந்துகொண்டிருந்தபோது, திடீரென அவரது மோட்டார் சைக்கிள் பழுதாகியுள்ளது. உடனடியாக, அப்பகுதியில் உள்ள சென்ட்ரல் திரையரங்கிற்கு எதிரே இருந்த ஒரு இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடையில் தனது வாகனத்தை பழுது பாரக்க கூறியுள்ளார். பழுதுபார்க்க சிறிது நேரம் பிடிக்கும் என்று மெக்கானிக் கூறியதால், அருகிலிருந்த கடைக்கு தேநீர் அருந்துவதற்காக பெரியசாமி நடந்து சென்றுள்ளார்.

அப்போது, சாலையோரத்தில் ஒரு பை கேட்பாரற்றுக் கிடப்பதைக் கண்டார். சந்தேகத்துடன் அந்தப் பையை எடுத்துத் திறந்து பார்த்தபோது, அஅதிர்ச்சிக்குள்ளானார். உள்ளே 500 ரூபாய் நோட்டுக் கட்டுகளாக, மொத்தம் 1 லட்சம் ரூபாய் பணம் இருந்தது.

*காவல் நிலையத்தில் ஒப்படைப்பு:*

சிறிதும் தாமதிக்காமல், அந்தப் பணப்பையுடன் நேராக திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்திற்குச் சென்றார் பெரியசாமி. அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ராமேஸ்வரியிடம், நடந்த விவரங்களைக் கூறி, தான் கண்டெடுத்த பணப்பையை ஒப்படைத்தார்.

பெரிய தொகையைக் எடுத்த போதும், சிறிதும் மனம் மாறாமல், அதை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெரியசாமியின் நேர்மையைக் கண்டு காவல் ஆய்வாளர் ராமேஸ்வரி மற்றும் அங்கிருந்த காவலர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். அவரது செயலைப் பெரிதும் பாராட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

* பணத்தை தவற விட்டது யார்?*

இந்தப் பணம் யாருடையது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பணத்தை தவறவிட்டவர் உரிய அடையாளங்களையும், ஆதாரங்களையும் திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் சமர்ப்பித்து, தங்களது பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>