மதவக்குறிச்சி என்ன குப்பை தொட்டியா? : கோழிபண்ணை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது!

திருநெல்வேலி அருகே, மதவக்குறிச்சி கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் நூற்றுக்கணக்கான இறந்த கோழிகளை கொட்டிய பண்ணை உரிமையாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி அருகே, மானூர் அருகேயுள்ள மதவக்குறிச்சி கிராமத்தின் மேற்குப் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் நூற்றுக்கணக்கான இறந்த கோழிகளைக் கொட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இதனால், அப்பகுதி முழுவதும் து துர்நாற்றம் வீசியது. தெரு நாய்கள் அந்த கோழிகளை தின்றுவந்ததால், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு, இதே பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்த சம்பமும் நடந்தது. இந்த நிலையில், இறந்த கோழிகள் கொட்டப்பட்ட சம்பவம், கிராம மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. குறிப்பாக, பறவைக் காய்ச்சல் போன்ற நோய்களால் இந்த கோழிகள் இறந்திருக்கலாமோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்தது. இதுகுறித்து, மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, மானூர் காவல்துறையினர் உடனடியாக களத்தில் இறங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கோழிகளைக் கொட்டிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில், மதவக்குறிச்சியிலிருந்து உகந்தான்பட்டி செல்லும் வழியில், நெல்லை டவுனைச் சேர்ந்த சோழராஜன் என்பவரின் மகன் பரத்மாரி (33) என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணை இருப்பது தெரியவந்தது.

விசாணையில், அவரது பண்ணையில், மழைக் காலத்தில் பரவும் நோய் தாக்கி கோழிகள் உயிரிழந்துள்ளன. இறந்த கோழிகளை முறையாக அப்புறப்படுத்தாமல், தனது பண்ணையில் வேலை பார்க்கும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிலாம் அகமது (20) என்ற ஊழியருடன் சேர்ந்து, மதவக்குறிச்சியில் கொட்டி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மானூர் காவல் ஆய்வாளர் சஜய் அளித்த புகாரின் பேரில், கோழிக்கழிவுகளை பொது இடத்தில் கொட்டி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திய பண்ணை உரிமையாளர் பரத்மாரி மற்றும் அவரது ஊழியர் பிலாம் அகமது ஆகிய இருவரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தபோதும், பிற துறைகளின் ஒத்துழைப்பு இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

* ஆய்வு செய்ய வராத சுகாதாரத் துறை:* இறந்த கோழிகள் கொட்டப்பட்டது குறித்து மானூர் காவல்துறையினர், சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்யவோ, கோழிகள் இறந்ததற்கான காரணத்தைக் கண்டறியவோ சுகாதாரத் துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால், வேறு வழியின்றி காவல்துறையினரே இறந்த கோழிகளைப் புதைக்கும் பணியை மேற்கொண்டனர்.

* *புகார் அளிக்க மறுத்த கிராம நிர்வாக அலுவலர் (VAO):* பொதுவாக, இதுபோன்ற சம்பவங்களில் கிராம நிர்வாக அலுவலர் அல்லது சுகாதாரத் துறையினர் அளிக்கும் புகாரின் பேரிலேயே நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இது தொடர்பாக புகார் அளிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டபோது, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் புகார் தர மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், காவல் ஆய்வாளர் சஜய் அவர்களே நேரடியாகப் புகார் அளித்து, குற்றவாளிகளைக் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

More News >>