தச்சநல்லூர் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் : 5 பேர் அதிரடி கைது
திருநெல்வேலி நகரையே அதிரவைத்த தச்சநல்லூர் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தச்சநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேந்திர குமார், காவலர்களுடன் கடந்த சனிக்கிழமை (11-10-2025) இரவு ஊருடையார்புரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். இரவு சுமார் 9. 30 மணியளவில், அங்குள்ள அம்மன் கோவில் அருகே ஒரு கும்பல் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருப்பதை போலீசார் கண்டனர். அவர்களிடத்தில் போலீசார் விசாரித்த போது, அந்தக் கும்பல், "நாங்கள் யாராக இருந்தால் உங்களுக்கு என்ன?" என்று கூறி ஆபாசமாக திட்டியுள்ளது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது, ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் அருண்குமார், ஊருடையார்புரத்தைச் சேர்ந்த முத்துகுமார் மகன் ஹரிஹரன் ஆகிய இருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினர். ராம்சூர்யா என்கிற ரன், பிரபாகரன் என்கிற வேல் பிரபாகரன், முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த பாலாஜி என்கிற மொட்டை பாலாஜி ஆகிய 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
கஞ்சா மற்றும் கொலை முயற்சி வழக்கில் தனது அண்ணன் அருண்குமார் கைதாகி சிறைக்கு செல்வதை அறிந்த அவரது தம்பி அஜித்குமார் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றார். தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து போலீசாரை பழிவாங்க திட்டமிட்டார். தொடர்ந்து, அஜித்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் அடங்கிய கும்பல், தச்சநல்லூர் காவல் நிலையம், சுப்பராஜ் நகர் சோதனைச் சாவடி மற்றும் தென்கலம் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியது.
இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக தச்சநல்லூர் காவல் நிலையத்தில் 3 தனித்தனி வழக்குகள் (குற்ற எண்கள்: 200, 201, 202) பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் BNS சட்டம், வெடிபொருள் தடுப்புச் சட்டம் மற்றும் பொது சொத்து சேத தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், ராஜ வள்ளிபுரத்தை சேர்ந்த கிருஷ்ண பெருமாள் (19) அஜித் குமார் (30 )பெருமாள்( 27 )சரண் (19 )அருண்( 22) ஆகிய 5 பேரும் தற்போது கைது திருநெல்வேலி மாநகர காவல் துறை கைது செய்துள்ளது.