புற்றுநோயால் என் தாயார் இறந்து விட்டார் - குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் வேதனையுடன் பேசிய இளைஞர்
திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் 2022-ம் ஆண்டு மே மாதம் நடந்த கோரமான கல்குவாரி விபத்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து மூடப்பட்ட, அந்த குவாரியின் ஒப்பந்ததார் தற்போது அதே பகுதியில் மற்றொரு புதிய குவாரி அமைக்க விண்ணப்பித்துள்ளார்.
அடைமிதிப்பான்குளத்தில் சங்கரநாராயணன் என்பவருக்குச் சொந்தமான கல்குவாரியில், 2022 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி இரவு, சுமார் 400 அடி ஆழத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ராட்சத பாறை சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த கோர சம்பவத்தில் 6 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.
தகவலறிந்து விரைந்த தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பல நாட்கள் போராடி விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில், விட்டிலாபுரத்தைச் சேர்ந்த முருகன் மற்றும் நாட்டார்குளத்தைச் சேர்ந்த விஜய் ஆகியோர் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டனர். இளையநயினார் குளத்தைச் சேர்ந்த செல்வம், காக்கைகுளத்தைச் சேர்ந்த செல்வகுமார், தச்சநல்லூர் ஊருடையான்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் ஆயன்குளத்தைச் சேர்ந்த மற்றொரு முருகன் ஆகிய 4 பேர் பலியானார்கள்.
இந்த விபத்து தொடர்பாக, குவாரியின் உரிமையாளர் சங்கரநாராயணன் மற்றும் ஒப்பந்ததாரர்களான செல்வராஜ், குமார் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து, சிலரைக் கைது செய்தது. விபத்தைத் தொடர்ந்து குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த விபத்தில் தொடர்புடைய செல்வராஜ் என்பவர் மீண்டும் தருவை பஞ்சாயத்து பகுதியில், அடைமிதிப்பான்குளத்திற்கு அருகேயே புதியதாக சாதாரண கல், ஜல்லி மற்றும் கிராவல் குவாரி அமைக்க அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார்.
*மீண்டும் அனுமதி கோரி கருத்துக்கேட்பு கூட்டம்*
இந்நிலையில், அதே நிறுவனம், அதே பகுதியில் மீண்டும் கல் குவாரி தொடங்குவதற்கான அனுமதியைக் கோரி விண்ணப்பித்திருந்தது. இதன் அடிப்படையில், இன்று (அக். 14) பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய்த்துறை, கனிமவளத்துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
புற்று நோய் வர காரணமா?
கூட்டம் தொடங்கியதும், குவாரிக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். அப்போது பேசிய ஒருவர், "என் தாயார் புற்றுநோயால் இறந்துவிட்டார். 2020-லிருந்து 2025-க்குள் எங்கள் பகுதியில் மட்டும் 21 பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர். என் அம்மாவைக் காப்பாற்ற 11 லட்சம் செலவு செய்தேன், ஆனால் முடியவில்லை. இந்த கல்குவாரிகளால் ஏற்படும் தூசு மாசுபாடே இதற்குக் காரணம்," என்று கண்ணீருடன் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "எங்களுக்கு இந்த குவாரி வேண்டாம். வேண்டுமென்றால் எங்கள் சொத்துக்களை அரசே எடுத்துக்கொள்ளட்டும். எங்களுக்கு நல்ல உணவு, நல்ல தண்ணீர், நல்ல காற்று கொடுத்தால் போதும். ஒவ்வொரு துளி ரத்தத்தையும் சிந்தி நாங்கள் போராடுவோம்," என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
*குறைந்து போன நிலத்தடி நீர், அதிகரித்த நோய்கள்*
கூட்டத்தில் பேசிய பெண் ஒருவர், "இந்த கல்குவாரிகள் வருவதற்கு முன்பு எங்கள் ஊரில் 40 அடியில் நிலத்தடி நீர் கிடைத்தது. ஆனால், இன்று 300 அடிக்குக் கீழே சென்றுவிட்டது. இதனால் விவசாயம் செய்ய முடியவில்லை. மேலும், குவாரியால் ஏற்படும் தூசு மாசால் புற்றுநோய் அதிகரித்து, கடந்த 5 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்," என்று வேதனையுடன் கூறினார்.
*அதிகாரிகளின் ஒருதலைபட்ச நடவடிக்கைக்குக் கண்டனம்*
சமூக ஆர்வலர்கள் பேசும்போது, "நான்கு பேர் பலியான கோர சம்பவத்தின் வடுவே இன்னும் ஆறவில்லை. அதற்குள் மீண்டும் அதே நிறுவனத்திற்கு அனுமதி கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்? கருத்துக்கேட்பு கூட்டம் என்பது வெறும் கண் துடைப்பு நாடகமாகவே நடத்தப்படுகிறது," என்று குற்றம் சாட்டினர். மேலும், ஒருசிலர் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
*அரசியல் அழுத்தம் காரணமா?*
அரசியல் கட்சி ஒன்றின் அழுத்தத்தால், விபத்து ஏற்படுத்திய குவாரி உரிமையாளருக்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகக் கூட்டத்தில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதற்கு அதிகாரிகள் உரிய முறையில் பதிலளிக்காததால், பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்தக் கருத்துக்கேட்பு கூட்டத்தில் நிலவிய பதற்றமான சூழல், குவாரிகளுக்கு எதிரான மக்களின் ஆழ்ந்த கோபத்தையும், அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.