போதைப்பொருள் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் - நெல்லை எஸ்.பி.சிலம்பரசன் உருக்கமான வேண்டுகோள்
போதைப்பொருள் ஒரு மாய உலகம்; அது உங்கள் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் என மாணவர்களுக்கு நெல்லை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் அறிவுரை வழங்கினார்.
நெல்லை மாவட்டம் சங்கர்நகர், சங்கர் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். அவர், பேசியதாவது,
*ஆசை காட்டும் நண்பர்கள்*
பெரும்பாலான மாணவர்கள் இளம் வயதில் நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாகவே தவறான பழக்கங்களுக்கு ஆளாகின்றனர். "சும்மா ஒருமுறை செய்துபார், நல்லாருக்கும் " என்று நண்பர்கள் கூறும்போது, அந்த நண்பர்கள் குழுவில் இருந்து ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்கிற பயத்தில் மாணவர்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். மாணவர்கள் யாருக்காகவும் இதுபோன்ற வற்புறுத்தல்களுக்கு அடிபணியக் கூடாது.
*உண்மையான நண்பனின் கடமை:*
ஒரு நண்பன் தவறான பாதைக்குச் செல்லும்போது, அதைப் பற்றி ஆசிரியர்களிடமோ அல்லது பெற்றோரிடமோ தெரிவிக்க வேண்டும். இது, காட்டிக்கொடுப்பது ஆகாது; அதுவே உண்மையான நட்புக்கு அழகு. "இன்று உங்கள் நண்பணின் தவறுகளை காட்டி கொடுக்க விரும்பவில்லை என்று நினைத்து, நீங்கள் அமைதியாக இருந்தால், நாளை அவனது முழு எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும். அவனை அந்தப் பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க தகவல் கொடுப்பதுதான் நீங்கள் அவனுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி.
*கடுமையான சட்டங்களும், சிதையும் வாழ்க்கையும்:*
போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களுக்கு மிகக் கடுமையான சட்டங்கள் உள்ளன. போதை மருந்துகள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் (NDPS) சட்டத்தின்படி, போதைப்பொருட்களை வைத்திருப்பது, பயன்படுத்துவது, விற்பனை செய்வது அல்லது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது என அனைத்துமே குற்றமாகும்.உங்களுக்குத் தெரியாமல் உங்கள் நண்பர் ஒரு சிப்பத்தைக் கொடுத்து இதை அவரிடத்தில் கொடுத்துவிடு என்று சொன்னால் கூட, நீங்கள் பிடிபட்டால் சட்டப்படி நீங்கள் குற்றவாளிதான். இந்த வழக்குகளில் குறைந்தபட்சம் ஓராண்டில் இருந்து 20, 30 ஆண்டுகள் வரையிலும், அவ்வளவு ஏன்... தூக்குத் தண்டனை வரை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. எனவே, விளையாட்டுத்தனமாக நினைத்து வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள்.
"போதையில்லாத் தமிழகம்" செயலி*
திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும். மேலும், "போதையில்லாத் தமிழகம்" (Drug-Free TN) என்ற செயலியை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்குத் தெரிந்த போதைப்பொருள் விற்பனை அல்லது பயன்பாடு குறித்த தகவல்களை மூலம் காவல்துறைக்குத் தெரிவிக்கலாம் . உங்கள் அடையாளம் முற்றிலும் மறைக்கப்படும்.
*வெற்றிக்கான வழி - புத்தக வாசிப்பு:*
மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற புத்தக வாசிப்பு அவசியமானது. பாடப் புத்தகங்களைத் தாண்டி, பல நல்ல புத்தகங்களை மாணவர்கள் வாசிக்க பழக வேண்டும். தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களை படிக்க வேணடும். உலகில் வெற்றி பெற்ற அனைத்து தலைவர்களுக்கும் இருந்த ஒரு பொதுவான பழக்கம் புத்தகம் வாசிப்புதான். தினமும் ஒரு அரைமணி நேரம் ஒதுக்கி வாசித்தால், உங்கள் அறிவு வளரும் .
*சமூக ஊடகங்கள் எனும் மயக்கம்:*
இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகப் பயன்பாடும் ஒரு வகையான போதைதான் .மாணவர்கள் தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும் .கல்வியில் கவனம் செலுத்தி, வளமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் ."
இவ்வாறு அவர் பேசினார்.