ஒருநாள்தாங்க மழை பெஞ்சுது : நெல்லை அவ்வளவுதாங்க!
வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என அமைச்சர் எ.வ. வேலு அறிவுறுத்தியும், நெல்லை மாநகரில் அவசர கதியில் மேற்கொள்ளப்பட்ட கண்துடைப்பு ஒட்டுப் பணிகளால், நேற்று ஒருநாள் பெய்த மழைக்கே சாலைகள் குண்டுகுழியுமாக மாறி போயின.
நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட சங்கரன்கோவில் - தச்சநல்லூர் சாலை, வண்ணாரப்பேட்டை பைபாஸ் அணுகுசாலை, டவுன் வ.உ.சி. தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகள் சிதைந்து போய் காணப்படுகின்றன. குறிப்பாக, பாதாள சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட சங்கரன்கோவில் சாலையில், அவசரமாக மேற்கொள்ளப்பட்ட ஒட்டு போட்ட பள்ளங்ள் முதல் மழைக்கே காணாமல் போய், மீண்டும் பள்ளமாக மாறியுள்ளன.
வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே தேங்கியுள்ள மழைநீரை, பணியாளர்கள் வாளிகள், சிமெண்ட் சட்டிகள் கொண்டு அகற்றினர். ஸ்மார்ட் தெரு என அறிவிக்கப்பட்ட டவுன் வ.உ.சி. தெருவில் தண்ணீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. பருவமழைக்கு முன்பாக மாநிலம் முழுவதும் சாலைகளைச் செப்பனிட வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டிருந்தார். மாநிலம் முழுவதும் சாலைகளில் ஒட்டுப்பணிகள் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்தப் பணிகள் தரமற்ற முறையில் இருந்ததால் , லேசான மழைக்கே நெல்லையில் பல இடங்களில் தார் சாலைகள் பெயர்ந்து போய் காணப்படுகின்றன.
முறையான திட்டமிடல் மற்றும் தரமாக பணிகள் மேற்கொள்ளப்படாததே இதற்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மண்டலம் வாரியாகக் குழுக்களை அமைத்து, வெள்ள பாதிப்புகளைத் தடுக்க உத்தரவிட்டுள்ளார். மறுபுறம், மாநகரின் அனைத்து சாலைகளே சேதமடைந்து போய் கிடக்கிறது. நெல்லை டவுன் பகுதியில் முறையான வடிகால் வசதிகள் இல்லாததால், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலைகளில் ஓடுவதால், நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது.