தச்சநல்லூர் 1வது வார்டில் கழிவுநீர் சாக்கடை அடைப்பால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

திருநெல்வேலி தச்சநல்லூர், மதுரை ரோடு 1வது வார்டு பகுதியில், சந்திமறித்தம்மன் கோவிலில் இருந்து பைபாஸ் சாலை செல்லும் வரையிலான சாக்கடை அடைபட்டு, தண்ணீர் தேங்கியிருப்பதால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது. கடந்த சில நாட்களாக நெல்லையில் பெய்து வரும் தொடர் மழையால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

வணிக நிறுவனங்களால் ஆக்கிரமிப்பு:

இந்தச் சாக்கடை பாதையின் அருபேயுள்ள கடைகள் சாக்கடைக்கு மேலே கான்கிரீட் தளம் அமைத்து மூடியுள்ளதால், சாக்கடையைத் தூர்வாரும் பணி பல ஆண்டுகளாக நடைபெறவில்லை. இதன் காரணமாக, பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் உள்ளிட்ட குப்பைகள் சாக்கடையில் நிரம்பி அடைப்பு ஏற்பட்டுள்ளது.

*வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்:*

தற்போது பெய்து வரும் கனமழையால், மழை நீருடன் சாக்கடையில் தேங்கியுள்ள கழிவுநீரும் கலந்து, அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால், வீடுகளுக்குள் துர்நாற்றம் வீசுவதோடு, மழை நின்ற பிறகும் வீட்டு முன்பு, சாக்கடைக் கழிவுகள் தேங்கி நிற்கின்றன. இதன் விளைவாக, அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு *நோய்த்தொற்று அபாயம்* ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

*கவுன்சிலர் நடவடிக்கை இல்லை:*

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வார்டு கவுன்சிலரிடம் பலமுறை முறையிட்டும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தற்போது 13வது வார்டு பகுதியில் கழிவுநீர் சாக்கடை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதைச் சுட்டிக்காட்டிய அப்பகுதி மக்கள், அதேபோல தச்சநல்லூர் 1வது வார்டு பகுதியிலும் அடைபட்டுக் கிடக்கும் இந்தச் சாக்கடையை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக ஜே.சி.பி. இயந்திரம் மூலம் தூர்வாரிச் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் இனியும் காலதாமதம் செய்யாமல், சுகாதாரச் சீர்கேட்டைத் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More News >>