பெற்றோரை பராமரிக்க மறந்தால்... சம்பளத்தில் பிடித்தம்! ஒரு மனிதநேயச் சட்டத்தின் அவசிய தேவை
நம்மை வளர்த்த பெற்றோர்கள் , ஒரு நாளில் இரண்டு முறை உணவிற்காக தவிக்க வேண்டிய நிலைக்கு வரக்கூடாது. ஆனால், இன்று நமது சமுதாயத்தில் பல முதியோர் தங்கள் குழந்தைகளால் புறக்கணிக்கப்பட்டு, பராமரிப்பின்றி வாடுகிறார்கள். அவர்களைப் பார்த்து தெலுங்கானா அரசு ஏற்கனவே ஒரு முக்கியமான சட்டத்தை உருவாக்கியுள்ளது.
அதாவது, அரசு பணியாளர்கள் தங்கள் பெற்றோரை புறக்கணித்தால், அவர்களின் சம்பளத்தில் 10–15% தொகை பிடித்தம் செய்து, பெற்றோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்ற நடைமுறை.
இது ஒரு சாதாரண சட்டம் அல்ல .இது மனித நேயத்துக்கான நினைவூட்டல். "உழைப்புக்குச் சம்பளம்" போல, "பெற்றோருக்குப் பராமரிப்பு" என்பது நம் கடமை என்பதை நினைவுபடுத்தும் விதிமுறை. இந்த சட்டம் அனைவருக்கும் வந்தால் எப்படி இருக்கும்? அது சமூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதை அரசு ஊழியர்களுக்கே மட்டும் அல்லாமல், தனியார் நிறுவன பணியாளர்களுக்கும் விரிவுபடுத்தலாம். இதற்கான மூன்று முக்கிய வழிமுறைகள் இருக்கலாம்
பொறுப்பு சட்டம் – பராமரிப்பு கடமை
ஒவ்வொரு மகனும், மகளும் தங்கள் பெற்றோரின் அடிப்படை செலவுக்கான ஒரு தொகையை மாதந்தோறும் வங்கிக் கணக்கில் செலுத்தும் கடமைக்குச் சட்டப் பூர்வமான வடிவம் கொடுக்கலாம்.
கண்காணிப்பு – மூத்தோர் நல வாரியம்
ஒவ்வொரு மாவட்டத்திலும் “மூத்தோர் நல வாரியம்” அமைத்து, பெற்றோர் புகார் செய்தால் விரைவாக விசாரித்து, தேவையான நடவடிக்கை எடுக்கலாம்.அதே சமயம், தங்கள் பெற்றோரை நேர்மையாக பராமரிக்கும் மகன்களுக்கும் மரியாதை வழங்கப்பட வேண்டும்.
ஊக்குவிப்பு – மரியாதை சலுகை
பெற்றோரை தாங்களே பராமரித்து வருபவர்களுக்கு வரி சலுகை, வீட்டு கடனில் வட்டி தள்ளுபடி போன்ற ஊக்கங்கள் வழங்கப்படலாம்.
நன்மைகள் பல
பெற்றோரின் வாழ்க்கை நிம்மதியாகும். “பொறுப்பு” என்ற நெறி குடும்பங்களில் மீண்டும் வேரூறும்.முதியோர் துயரங்கள் குறைந்து, சமூகம் மனதளவில் வலுவாகும். மனிதனின் கடமை சம்பளத்தால் அளவிட முடியாது. ஆனால் சட்டம் வழியாக நினைவூட்டப்படலாம். அப்படி ஒரு நினைவூட்டலாக இந்தச் சட்டம் இருந்தால்,மனிதநேயம் நம் குடும்பங்களிலும் நம் சமுதாயத்திலும் மீண்டும் உயிர் பெறும்.
- ஈரநெஞ்சம் மகேந்திரன்