ஆலங்குளம் அருகே விபரீதம் : இளம் பெண் உயிரை பறித்த இன்ஸ்டாகிராம் பழக்கம்

ஆலங்குளம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய வாலிபர் வெளியிட்ட வீடியோவால் அவமானமடைந்த இளம்பெண் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தைகள் இல்லை. இவரது கணவர் ஆலங்குளத்தில் உள்ள அரசு குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களாக இளம்பெண்ணின் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்ததால், கணவன்-மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் , அந்த பெண் தனது தாத்தா வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை தனது அறையில் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

*வீடியோ மிரட்டலும் பணப் பறிப்பும்:*

தகவல் அறிந்த ஆலங்குளம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ம உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகத் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாபேரியைச் சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கிப் பழகிய நிலையில், அவர்கள் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து அந்த வாலிபர் மிரட்டி, அந்த பெண்ணிடம் இருந்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை பணம் பறித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மிரட்டல் குறித்துப் பெண்ணின் பெற்றோர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில், சம்பந்தப்பட்ட வாலிபரைப் பிடித்து விசாரித்த காவல்துறையினர், அவரிடம் இருந்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் அழித்ததாகத் தெரிகிறது. ஆனால், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், சில நாட்களுக்கு முன்பு மீண்டும் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளன. இதனால் மிகுந்த அவமானமடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர், எழுதியுள்ள கடிதத்தில், மருதம்புத்தூரைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட மொத்தம் ஐந்து பேரின் பெயர்களை தற்கொலைக்குத் தூண்டிய நபர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இன்ஸ்டாகிராம் மூலம் பணம் பறித்த வாலிபர் தவிர, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள், அதே வீடியோக்களைக் காண்பித்து தன்னுடன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதாகவும் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அழிக்கப்பட்ட வீடியோக்கள் எப்படி மீண்டும் சமூக வலைதளங்களில் பரவியது என்பது குறித்தும், இதற்கு மகளிர் காவல்துறையினர் தான் காரணம் என்றும் பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளதால், இச்சம்பவம் குறித்து ஆலங்குளம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More News >>