குழந்தையின் விரலில் சிக்கிய மோதிரம்: அம்பாசமுத்திரம் தீயணைப்பு வீரர்கள் கழற்றினர்
குழந்தையின் விரலில் இறுகி வீக்கத்தை ஏற்படுத்திய தங்க மோதிரத்தை, அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் , 'ரிங் கட்டர்' கருவியின் உதவியுடன் பத்திரமாக கழற்றினர்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பொட்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது மகள் சுஹாசினி (வயது 2). கடந்த ஆண்டு, சுஹாசினிக்கு அவரது பெற்றோர்கள் தங்க மோதிரம் ஒன்றை அணிவித்துள்ளனர். குழந்தை வளர்ந்து வரும் நிலையில், நாளடைவில் அந்த மோதிரம் குழந்தையின் விரலுடன் இறுக்கமாக ஒட்டிக்கொண்டு, கழற்ற முடியாத நிலை ஏற்பட்டது. நேற்று முன்தினம் நிலைமை மோசமடைந்து, மோதிரம் சிக்கியிருந்த விரலில் வீக்கம் ஏற்பட்டு, குழந்தை வலியால் அழுதது.
பெற்றோர் விரலில் சிக்கியிருந்த மோதிரத்தைக் கழற்றப் பல வழிகளிலும் முயற்சித்தனர். ஆனால், அது பலனளிக்காததோடு, விரலில் வீக்கமும் அதிகரித்தது. தொடர்ந்து, தங்கள் மகள் சுஹாசினியை அழைத்துக் கொண்டு அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலையத்திற்கு வந்தனர். நிலைய அலுவலர் பலவேசம் பெற்றோரிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். பின்னர், 'ரிங் கட்டர்' (Ring Cutter) கருவியைப் பயன்படுத்தி மிகுந்த கவனத்துடனும், லாவகத்துடனும் மோதிரத்தைச் சிறிதளவு கூடக் குழந்தையின் விரலுக்குக் காயம் ஏற்படாத வண்ணம் வெட்டி அகற்றினர்.
தொடர்ந்து, குழந்தை விடுவிக்கப்பட்டதை அடுத்து, நிம்மதியடைந்த பெற்றோர், தீயணைப்பு வீரர்களின் மனிதநேயமிக்க பணிக்குப் பூங்கொத்துக் கொடுத்து மனப்பூர்வமாக நன்றி தெரிவித்தனர். பின்னர், குழந்தையுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.