சுமைகளுக்கு இடையே வாழ்க்கை சுமை : நெல்லை போர்ட்டர்களின் வருவாய் எப்படி?
தீபாவளி மற்றும் இதரப் பண்டிகைக் காலங்களில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணிக்க ரயில் நிலையங்களில் குவிவது வழக்கம். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் விடுமுறையைக் குடும்பத்துடன் கொண்டாடி மகிழும் இந்த நாட்களில், ரயில்வே நிலையத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கூலித்தொழிலாளர்கள் (போர்ட்டர்கள்) மட்டுமே ஓய்வின்றிப் பயணிகளின் சுமைகளைச் சுமந்து உழைக்கின்றனர். திருநெல்வேலி ரயில்வே சந்திப்பில் பணிபுரியும் போர்ட்டர்களின் கடினமான உழைப்பு, வருமானம் , ஓய்வின்றி குடும்பத்திற்காக ஓடும் இவர்களின் வாழ்க்கை நிலை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.
பொதுமக்கள் விடுமுறைக்குச் சொந்த ஊருக்கு வந்து செல்லும் நாட்களில்தான் போர்ட்டர்களுக்கு அதிக வேலை இருக்கும். பண்டிகை காலத்தில் வருமானம் கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்காக, இவர்கள் விடுமுறையே எடுப்பதில்லை. திருநெல்வேலி ரயில்வே சந்திப்பில் 16 வருடங்களாகப் போர்ட்டராகப் பணிபுரியும் வேல்முருகன் கூறுகையில், வேலைக்கு வந்துவிட்டால் எப்படியும் பசியில்லாமல் போகலாம். வீட்டுக்குச் சம்பாதித்துக்கொண்டு போகலாம். இருப்பினும், சமீப காலங்களில் எங்களது வருமானம் குறையத் தொடங்கியுள்ளது.
நவீன காலத்தில் பயணிகள் சக்கரங்கள் கொண்ட 'இழுவைப் பெட்டிகளை' (Wheeled Trolley Bags) அதிகம் பயன்படுத்துவதால், முந்தைய காலத்தைப்போலச் சுமை தூக்க பயணிகள் கூறுவது இல்லை. காற்றடித்தால் தூற்றிக் கொள்ள வேண்டும் என்பது போல் அட்ஜஸ்ட் செய்து வேலை பார்க்கிறோம். பயணிகள் கேட்ட கட்டணத்தில் 90% பேர் முழுத் தொகையையும் கொடுத்துவிடுகின்றனர். மீதமுள்ள 10% பேர் மட்டும் பேரம் பேசுகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரை நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கவும், பண்டிகை முடித்து மறுநாள் மீண்டும் வேலைக்குத் திரும்பிவிட்டேன் 'என்கிறார்.
மற்றோரு போர்ட்டர் சரவணக்குமார் கூறும் போது, "பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைக்குதான் அதிகக் கூட்டமும் வரும். அதிக வருமானமும் கிடைக்கும். ஆனால், தற்போது பயணிகள் தங்கள் பெட்டிகளைத் தாங்களே இழுத்துச் செல்வதால், எங்களது வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது. காலையில் ரயில் வரும் நேரங்களில் தான் வேலை. மற்ற நேரங்களில் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். ஒரு நாளைக்குச் சுமார் ரூ. 800 முதல் ரூ. 900 வரை கிடைக்கிறது. சில நாட்களில் ரூ. 200 வரை கூட கிடைக்காது . எனக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் கல்லூரியிலும், மகள் பத்தாம் வகுப்பிலும் படிக்கின்றனர். நான் சுமை தூக்கும் தொழிலில் இருந்தாலும், தனது மகன் எதிர்காலத்தில் கணினி சார்ந்த வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது எனது ஆசை" என்கிறார்.