பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு தடை வேண்டும் - அமைச்சர் கீதா ஜீவனிடம் சிறு தீப்பட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கின்ற படைக்கலன் உரிமை சட்டத்தை மாற்றி வாழ்நாள் உரிமம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அமைச்சர் கீதா ஜீவனிடம் மனு அளித்தனர்.
பின்னர் இது குறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் பரமசிவம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்,
'உலகத்தில் தீக்குச்சி உருவாகி 167 வருடம் ஆகிவிட்டது. அது தீப்பெட்டி ஆக்கப்பட்டு 126 வருடம் ஆகிறது. இந்தியாவில் 1910 ஆம் ஆண்டு இயந்திரத்தால் தீப்பட்டி உற்பத்தி செய்யப்பட்டது. சிவகாசியில் இருந்து இருவர் அந்த தொழில்நுட்பங்கள் எல்லாம் கற்றனர். பின்னர், சிவகாசியில் வந்து 1923 ஆம் ஆண்டு கையால் செய்யக்கூடிய தீப்பெட்டி உருவாக்கினர். தீப்பட்டி அறிமுகம் செய்யப்பட்டு 100 ஆண்டுகள் அவதை முன்னிட்டு ஒரு பெரும் விழாவை எடுக்க எங்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. மத்திய மாநில அரசுகள் எங்களுக்கு பல பிரச்னைகளில் உறுதுணையாக இருந்துள்ளனர். அதனால் , இந்த தொழில் நூற்றாண்டையும் கடந்து கந்தக பூமியில் நிலைபெற்றுள்ளது.
இந்தியாவுக்கு தேவையான 90 சதவிகிதம் தீப்பெட்டி தமிழகத்தில்தான் தயாரிக்கப்படுகிறது. உலகத்துக்கு தேவையான தீப்பெட்டிகளில் 45 சதவீதம் இந்தியாவிலிருந்து தயாரித்து வழங்குகிறோம். வருடத்துக்கு 800 கோடி உள்நாட்டு தீப்பட்டி வணிகமும் 600 கோடி வெளிநாட்டு தீப்பட்டி வணிகமும் நடைபெறுகிறது.
இந்த தொழில் நம்பி 5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். மத்திய அரசை பொறுத்தவரையில் ஜிஎஸ்டி வரி குறைப்பு, வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய சைனா சிகரெட் லைட்டருக்கு தடை விதித்துள்ளது. அதற்கு நன்றி செலுத்துகிற வகையில் கடந்த மாதம் மத்திய நிதி அமைச்சரை அழைத்து விழா நடத்தினோம், அதே மாதிரி மாநில அரசு பொறுத்த வரையில, நிறைய உதவிகள் எங்களுக்கு செய்துள்ளனர். தீப்பெட்டிக்கு தேவையான முக்கிய மூலப்பொருளான பொட்டாசியம் குளோரைட் வாங்க ஒவ்வொரு ஆண்டும் உரிமம் புதுப்பிக்க வேண்டியது இருந்தது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி இதை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று மாற்றி தந்தார். லைட்டர்கள் மட்டுமல்ல தீப்பட்டிகள் கூட இந்தியாவில் இறக்குமதி செய்யவும் திமுன அரசு தடை பெற்று தந்தது. எனவே, முதலமைச்சர் ஸ்டாலின் எங்களுடைய நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் . இது தொடர்பாக அமைச்சர் கீதா ஜீவனை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.