சபரிமலை பயணம் புனித யாத்திரையாக அறிவிப்பு - திருநெல்வேலியில் இலங்கை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பேட்டி

இலங்கை பெருந்தோட்ட உட்கட்டமைப்பு துறை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது , அவர் கூறியதாவது,

உலகத்திலேயே சபரிமலை யாத்திரையை ஒரு *புனித யாத்திரையாக (Holy Pilgrimage)* அறிவித்த ஒரே அரசு இலங்கை அரசு மட்டுமே .இது இலங்கை தமிழர்களின் சுமார் 50 ஆண்டு கால கோரிக்கையாக இருந்தது. இந்தக் கோரிக்கையை தற்போதைய இலங்கை அரசு நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம், சபரிமலை புனித யாத்திரைக்கான அனைத்துச் சலுகைகளும் இலங்கை அரசால் வழங்கப்படும். இலங்கையின் பொருளாதாரம் மிக வேகமாக மீண்டு வருகிறது. இலங்கையில் லஞ்சம் முழுவதும் ஒழிக்கப்பட்டுள்ளது. அரசு பிரதிநிதிகளின் வீண் விரையம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களைப் போல செயல்படுகின்றனர். இலங்கையில் இருந்த இரட்டைச் சட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதன் மூலம், அனைவருக்கும் நீதி சமம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா - இலங்கை அரசியல் ரீதியாக நெருக்கம் கொண்ட நாடுகள். இலங்கை அதிபர் மற்றும் இந்திய பிரதமர் நல்ல நட்புடன் உள்ளனர். இலங்கை பொருளாதாரத்திற்காக இந்தியா பெரும் உதவியை செய்து வருகிறது.

இலங்கை இந்திய மக்கள் உறவுக்காரர்கள். ஏன் மீனவர் பிரச்சனையை வைத்து பகைமை உண்டாக்க வேண்டும்? இந்தச் சிக்கலை ஒதுக்கி வைத்துவிட்டு, மீன்வளம் மற்றும் கடல்வளம் குறித்து இரு நாடுகளும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மீனவர் பிரச்சனையில் இருநாட்டு தலைவர்களும் பேசி முடிவெடுப்பார்கள். விரைவில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும். இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவில் இருக்கும் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பினால், அவர்களை இலங்கை அரசு வரவேற்கத் தயாராக இருக்கிறது. இலங்கையை சீனா ஆக்கிரமித்துள்ளதாகச் சொல்வது அனைத்தும் பொய். இலங்கை ஒரு சுயாதீனமான நாடு. அனைத்து நாடுகளும் செய்யும் முதலீடுகளையும் உதவிகளையும் செய்வதை வைத்து ஆக்கிரமிப்பு எனச் சொல்லக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

More News >>