தூத்துக்குடி : பி என் டி காலனியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி : மேயர் ஆய்வு

தூத்துக்குடி நகரில் பெய்த  பலத்த மழை காரணமாக பி என் டி காலனி 12வது தெரு பகுதியில் சேதம் அடைந்த சாலைகளை  சீரமைக்கும் பணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக  தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர் . பி என் டி காலனி பகுதிகளில் பாதாள சாக்கடை பணி முடிவடைந்த பகுதிகளில் மழை நீர் சாலைகளில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் . சாலை எது  பள்ளம் எது என்று தெரியாததால் விபத்து ஏற்படும் அபாயமும் உருவானது .  உடனடியாக இந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் 

இதையடுத்து,  பி என் டி காலனி பகுதியில் மழைநீர் தேங்கி சேதமடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணி மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இன்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து,  மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் , "' கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில்  மழை நீர் தேங்கினால், வெளியேற இரண்டு மாதங்களுக்கு மேலாகும் . ஆனால்.  தற்போது கடந்த நான்கரை ஆண்டுகளில் மழைநீர் வெளியேற  வடிகால் முறையாக அமைக்கப்பட்டதால் சுமார் 2 மணி நேரத்தில் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் மழை நீர் வடிந்து விடுகிறது.  மேலும் , 14 வழித்தடங்கள் மூலம் தூத்துக்குடி மாநகர பகுதிகளிலிருந்து மழை நீர் வெளியேற்றி கடலில் கலக்க வைக்கப்படுகிறது.  தற்போது, வானிலை ஆய்வு மையம் தூத்துக்குடி மாநகரப் பகுதிக்கு மழை இல்லை என தெரிவித்துள்ளது. எனினும், மழை  பெய்தால்  உடனடியாக மழை நீரை அகற்ற அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . அதற்கான ஆய்வும் நடத்தப்பட்டு வருகிறது' என்றார். 

More News >>