நெல்லை : நாய்கள் விரட்டியதால், பையை கழற்றி போட்டு உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய மாணவன்

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் கட்டுக்கடங்காமல் பெருகிவரும் தெரு நாய்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீதிகளில் நடமாடவே அஞ்சும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், பேட்டையில் பள்ளி மாணவனை நாய்கள் ஓட ஓட விரட்டியடித்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பேட்டை பகுதியில் நேற்று (அக்டோபர் 24) மாலை, பள்ளி முடிந்து தனது புத்தகப் பையுடன் மாணவன் ஒருவன் வீடு திரும்பிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, அங்கு கூட்டமாக படுத்திருந்த ஐந்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள், திடீரென அந்த மாணவனைச் சுற்றி வளைத்து, குரைத்தபடி துரத்தத் தொடங்கின. இதை, சற்றும் எதிர்பாராத இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவன், தனது தோளில் மாட்டியிருந்த பள்ளிப் பையை போட்டுவிட்டு உயிரை கையில் பிடித்துக்கொண்டு தெருவில் ஓட்டம் பிடித்தான். நாய்கள் விடாமல் துரத்திச் செல்லும் அந்த பதைபதைக்கும் காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த கொடூரமான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, நெல்லை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. "பள்ளி முடிந்து வரும் எங்கள் பிள்ளைகளின் உயிருக்கு யார் உத்தரவாதம்?" என பெற்றோர்கள் அச்சத்துடன் கேள்வி எழுப்புகின்றனர். பேட்டை மட்டுமல்லாமல், தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் என மாநகரின் முக்கிய பகுதிகளில் எல்லாம் நாய்களின் ராஜ்ஜியமே நடப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர், தெரு நாய்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாவது தொடர்கதையாகி வருகிறது.

மாநகராட்சி நிர்வாகம் இனியும் தாமதிக்காமல், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தெரு நாய்களை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த நெல்லை மக்களின் கோரிக்கையாக உள்ளது.

More News >>