பணகுடி அருகே வீடு புகுந்து மாணவிகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது கொடூரத் தாக்குதல் - 6 பேருக்கு வலைவீச்சு

பணகுடிக்கு அருகே சிவகாமபுரம் கிராமத்தில், கூலித் தொழிலாளி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல், மாணவிகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது ஆயுதங்களால் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம், சிவகாமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ். கூலித் தொழிலாளியான இவரது மனைவி பெயர் டெய்சி. இவர்களுக்கு திவ்யலட்சுமி, ஜெனிஷா, ஜோதி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இவர்கள் மூவரும் அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

பொன்ராஜ் நேற்று முன்தினம் (அக். 26) மதியம் தனது மனைவி மற்றும் மகள்களுடன் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது கம்பு, கற்கள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த சுமார் 6 பேர் கொண்ட ஒரு கும்பல், திடீரென வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது.

பின்னர், பொன்ராஜ், அவரது மனைவி டெய்சி, மகள்கள் திவ்யலட்சுமி, ஜெனிஷா, ஜோதி என 5 பேர் மீதும் கண்மூடித்தனமாக சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. மேலும், ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் வீட்டிற்குள் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்து சூறையாடியது. தாக்குதல் நடத்தி முடித்தபின் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

இந்தக் கொடூரத் தாக்குதலில் படுகாயம் அடைந்த பொன்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு, மேல் சிகிச்சைக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து பொன்ராஜ் அளித்த புகாரின் அடிப்படையில், பணகுடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், பொன்ராஜ் குடும்பத்தினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு குடும்பத்தினருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்ததாகவும், அந்தப் பகையின் காரணமாகவே இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

சிறுமிகள் மற்றும் குடும்பம் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவான தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்வதற்கு காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

More News >>