டீ ரூ.15க்கு பதில் ரூ.6! - மக்கள் பசியாற்றும் பணியில் நெல்லை எஸ்பி அலுவலக கேண்டீன்
விலைவாசி உயர்வுக்கு மத்தியில், லாப நோக்கமின்றி பொதுமக்களின் பசியாற்றும் ஒரு உணவகத்தின் கதை இது!
"ஒரு டீ குடிக்கவே ரூ.15 ஆகிவிடுகிறது," என்று அன்றாட வாழ்வில் நொந்துபோய் பேசும் சாமானியர்கள்தான் அதிகம். தமிழகத்தில் பெட்டிக் கடைகளில்கூட டீ, காபி விலை விண்ணைத் தொட்டு, 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இத்தகைய விலை உயர்வுக்கு மத்தியில், நெல்லையில் உள்ள ஒரு அரசு அலுவலக கேண்டீன், விலைவாசிக்குச் சவால் விட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் மக்கள் பசியாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இந்தக் கேண்டீன், பசியால் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
*விலைப்பட்டியலே ஒரு 'மேஜிக்'!*
பொதுவாக, அரசு அலுவலக உணவகங்கள் ஊழியர்களுக்கானது என்ற பிம்பம் இருக்கும். ஆனால், "வாடிக்கையாளரே எங்கள் முதலாளி" என்ற கொள்கையுடன் இயங்கும் இந்தக் கேண்டீன், போலீஸாரைத் தாண்டி பொதுமக்களையும், பள்ளி-கல்லூரி மாணவர்களையும் இன்முகத்துடன் வரவேற்கிறது. இங்குள்ள விலைப்பட்டியலைப் பார்த்தால், இந்தக் காலகட்டத்தில் இது சாத்தியமா ? என்கிற வியப்பையே தருகிறது.
* *வெளியே ரூ.15, இங்கே வெறும் ரூ.6:* சுவையான ஒரு டீயின் விலை!* *காபி:* ரூ. 7 மட்டுமே.* *வடை:* ரூ. 6* *சமோசா:* ரூ. 8* *ஒரு பிளேட் பொங்கல்:* ரூ. 25 (இதனுடன் சாம்பார், சட்னி இலவசம்)* *வெஜ் பிரியாணி (ஒரு பிளேட்):* ரூ. 35* *கலவை சாதங்கள்:* லெமன் சாதம், தக்காளி சாதம், புளியோதரை உட்பட அனைத்து வகை சாதங்களும் வெறும் ரூ. 30-க்கு கிடைக்கின்றன.
*மாணவர்களுக்கு கிடைத்த அட்சய பாத்திரம்*
எஸ்பி அலுவலகத்திற்கு அருகிலேயே பல பள்ளி, கல்லூரிகள் அமைந்திருப்பதால், தினசரி நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்தக் கேண்டீனுக்குப் படையெடுத்து, பசியாற்றி கொள்கின்றனர். வெளியே ஒரு டீ, ஒரு வடை சாப்பிட்டாலே குறைந்தபட்சம் ரூ.25 ஆகிவிடும். ஆனால் இங்கே ரூ.12-க்குள் முடித்துவிடலாம். மதிய உணவும் ரூ.30-க்கு கிடைப்பதால், பணம் மிச்சமாகிறது," என்று மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். விலை குறைவு என்பதால் தரம் குறைவு என்று எண்ணத் தேவையில்லை. தினமும் நூற்றுக்கணக்கானோர் சாப்பிடும் இந்த உணவின் சுவையும், தரமும் இங்கு மிக சிறப்பாகவே உள்ளது.