பாஜக கூட்டணியில் விஜய் சேராவிட்டால்... நெல்லையில் சீமான் வைக்கும் ட்விஸ்ட்

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், பா.ஜ.க கூட்டணியில் சேராவிட்டால், கரூர் சம்பவத்தில் சி.பி.ஐ விசாரணை தீவிரமடையும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருநெல்வேலியில் கூறினார்.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,அவர் கூறியதாவது,

''கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய். சி.பி.ஐ விசாரணையில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தனக்கு எதிராகப் பேசிவிடக் கூடாது என்பதற்காகவே 20 லட்சம் வழங்கியுள்ளார். 20 லட்ச ரூபாயை வாங்கிய குடும்பங்கள் சிபிஐ விசாரணையில் எதிராகப் பேசுமா ?

சம்பந்தப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் ஆதவ் அரஜூனா , நடிகர் விஜய் பெயர்கள் ஏன் இடம்பெறவில்லை? 41 பேர் இறப்புக்குக் காரணமான விஜய்யின் பெயரையே முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கவில்லை. அப்படியிருக்கையில், சி.பி.ஐ வழக்கு விசாரணை நேர்மையாக நடக்குமா? மாநில அரசு காவல்துறை விசாரிக்கும் போது முன்ஜாமீன் கேட்ட புஸ்ஸி ஆனந்த், சி.பி.ஐ விசாரணை வந்த பிறகு முன் ஜாமீன் மனுவைத் திரும்பப் பெற்றது ஏன் ? சி.பி.ஐ இந்த வழக்கில் விஜய்யை விசாரிக்கப் போகிறதா? அல்லது பாதுகாக்கப் போகிறதா? பா.ஜ.க கூட்டணிக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வரவில்லை என்றால் சி.பி.ஐ விசாரணை தீவிரமாகும். கரூர் எஃப்.ஐ.ஆரில் விஜய் பெயர் சேர்க்கப்படாதது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் பதில் அளிக்க வேண்டும்.

நாட்டைப் பற்றி கவலைப்படுபவர்கள் என் பின்னால் வரட்டும். நடிகர்கள் பின்னால் செல்பவர்கள் என் பின்னால் வர வேண்டாம். ஆளுங்கட்சியாக இருக்கும்போது டாஸ்மாக்கைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது டாஸ்மாக்கிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதும்தான் தி.மு.க.வின் பாலிசி. பிப்ரவரி 7-ஆம் தேதி திருச்சியில் நாம் தமிழர் கட்சி மாநில மாநாடு நடைபெறும் . அப்போது, அனைத்து சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களும் முழுமையாக அறிவிக்கப்படுவார்கள். கனிம வளங்களைச் சுரண்டும் கூட்டங்கள் குறித்து வெளி உலகத்துக்குக் காட்டுவதற்காகவே மலைகளுடன் கால்நடைகளுடன் மாநாடு நடத்துகிறேன். திருச்சியில் மாநாடு நடைபெறுவதால் திருப்புமுனை என்று நினைக்க வேண்டாம். எங்கள் திருப்பம் எங்களது சிந்தனையில் இருக்கிறது.

மக்கள் மனநிலையில் மாற்றம் வந்தால் எந்தக் கொம்பாதி கொம்பனையும் தேர்தலில் மக்கள் தோற்கடிப்பார்கள் .இலங்கையில் ஜனதா அபி முக்தி பெரமுனாம் (JVP) 3% வாக்குகளை மட்டுமே வைத்திருந்த நிலையில், பொதுமக்கள் மனதில் மாற்றம் வந்ததால் இன்று 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது என்பதை மறந்து விட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

More News >>