கவின் ஆணவக் கொலைதான் : ஜாமீனே கிடையாது நெல்லை நீதிமன்றம் அடுக்கும் காரணங்கள்
தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய திருநெல்வேலி சாதி ஆணவக் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சரவணனின் ஜாமீன் மனுவை திருநெல்வேலி கூடுதல் அமர்வு நீதிமன்றம் 3வது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை மற்றும் நீதிமன்ற விசாரணையின் அடிப்படையில், ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையில் பணிபுரிந்து வந்த கவின் செல்வகணேஷ் என்ற இளைஞர், உதவி ஆய்வாளர் சரவணனின் மகளான சுபாஷினியைக் காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சுபாஷினியின் குடும்பத்தினர், கவின் செல்வகணேஷை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜூலை 27-ஆம் தேதி, சுபாஷினியின் சகோதரரான சுர்ஜித், கவின் செல்வகணேஷை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார். சிபிசிஐடி விசாரணையில், சுபாஷினியின் தந்தையும் உதவி ஆய்வாளருமான சரவணன் (A2) மீதும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
* சதித்திட்டம்: தனது மகளின் காதல் விவகாரம் பற்றி முன்கூட்டியே அறிந்திருந்தும், மகனின் செயல்பாடுகள் அறிந்திருந்தும், அதைத் தடுக்காமல் குற்றத்திற்குத் துணை போயுள்ளார்.* போலி வாகன எண்: கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தைப் போலி பதிவு எண்ணுடன் தனது மகனுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார்.* ஆதாரங்களை மறைத்தது:கொலை நடந்த பிறகு, தனது மகன் சுர்ஜித் (A1) மற்றும் மனைவி கிருஷ்ணகுமாரி (A3) ஆகியோருடன் சேர்ந்து, உறவினர் ஒருவரின் இடத்தில் ஆதாரங்களை மறைக்க முயற்சித்துள்ளார்.* விசாரணையைத் திசை திருப்பியது: கொலை நடந்த இடத்திற்குச் சென்று, காவல்துறையினரிடம் தவறான தகவல்களைக் கொடுத்து விசாரணையைத் திசை திருப்ப முயன்றுள்ளார்.
ஜாமீன் மறுக்கப்பட்டதற்கான முக்கிய காரணங்கள்
நீதிமன்றம் தனது உத்தரவில், சரவணனுக்கு ஜாமீன் வழங்க மறுத்ததற்கான காரணங்களைத் தெளிவாகப் பட்டியலிட்டுள்ளது:
1. மனைவி தலைமறைவு: இந்த வழக்கில் 3-வது குற்றவாளியான சரவணனின் மனைவி கிருஷ்ணகுமாரி, அவரும் ஒரு காவல் உதவி ஆய்வாளராக இருந்தும், இதுவரை கைதாகாமல், தலைமறைவாக உள்ளார். இது வழக்கின் மிக முக்கிய பலவீனமாகக் கருதப்படுகிறது.
2. சாட்சிகளைக் கலைக்கும் அபாயம்: மனுதாரர் ஜாமீனில் வெளியே வந்தால், தலைமறைவாகவுள்ள தனது மனைவியுடன் சேர்ந்து, சாட்சிகளை மிரட்டவும், ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்புள்ளது. இருவரும் காவல்துறை அதிகாரிகளாக இருப்பதால், அவர்களால் விசாரணையில் எளிதாகத் தலையிட முடியும் என நீதிமன்றம் கருதுகிறது.
3. வழக்கின் தீவிரம்: இது ஒரு சாதாரண கொலை வழக்கு அல்ல, சாதி ஆணவத்தின் காரணமாக நடந்த கொடூரமான "ஆணவக் கொலை" என்று நீதிமன்றம் ஆணித்தரமாக கருதுகிறது.
4. முழுமையடையாத விசாரணை:கொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் ஐபோன் இன்னும் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. போனை ஆராய்ந்தால், இந்த வழக்கில் மேலும் பல முக்கிய ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, விசாரணை இன்னும் முழுமையடையவில்லை.
இந்தக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, சரவணனின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.