ஆசிய யூத் தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற எட்வினா ஜேசனுக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய யூத் தடகளப் போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழ்நாட்டின் எட்வினா ஜேசனுக்கு, அவரது சொந்த ஊரான திருநெல்வேலியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பஹ்ரைனின் ரிஃபா நகரில் நடைபெற்ற ஆசிய யூத் தடகளப் போட்டியில், பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை 16 வயதான எட்வினா ஜேசன் பங்கேற்றார். இந்த போட்டியில் 55.43 வினாடிகளில் இலக்கை கடந்து அவர் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். தங்கப் பதக்கத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆயிஷா தாரிக் வென்றார்.

தொடர்ந்து, சொந்த ஊரான திருநெல்வேலிக்கு ரயிலில் திரும்பிய எட்வினா ஜேசனுக்கு, ரயில் நிலையத்தில் உறவினர்கள், நண்பர்கள், நாரணம்மாள்புரம் விளையாட்டுக் கழக வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். பாரம்பரிய செண்டை மேளம் முழங்க, அவரை தோளில் சுமந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாலைகள் மற்றும் சால்வைகள் அணிவித்து கௌரவித்தனர்.

எட்வினா பேட்டி

எட்வினா ஜேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த 8 வருடங்களாக நான் தடகளத்தில் ஈடுபட்டு வருகிறேன். முதலில் சாதாரணமாக மைதானத்திற்குச் சென்ற நான், பின்னர் அதையே எனது இலட்சியமாக மாற்றிக்கொண்டேன். எனது பயிற்சியாளர்கள் மகேஷ் அண்ணா மற்றும் மூர்த்தி சார் இல்லாமல் இந்த வெற்றியை என்னால் அடைந்திருக்க முடியாது. அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது பெற்றோர் அனுமதித்ததால்தான் என்னால் மைதானத்திற்குச் சென்று பயிற்சி பெற முடிந்தது. அவர்களது ஆதரவு இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை. கிராமப்புறங்களில் இருந்து விளையாட்டுத் துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு, கடின உழைப்பும், மன உறுதியும் இருந்தால் வெற்றி நிச்சயம் ஒலிம்பிக்கில் சாதனை படைப்பதே தனது லட்சியம் 'என்றார்.

*பயிற்சியாளர் மகேஷ் சொல்வது என்ன?

எட்வினாவின் பயிற்சியாளர்களில் ஒருவரான மகேஷ் பேசுகையில், "முதலில், எங்களை ஆதரித்த முதல்வர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு நன்றி. மேலும், தமிழ்நாடு தடகள சங்கத்திற்கும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கொள்கிறோம். நாங்கள் 2032 ஒலிம்பிக்கை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இந்த வெற்றி, அந்தப் பயணத்தில் எங்களுக்குக் கிடைத்த ஒரு ஊக்கம். எங்களது நாரணம்மாள்புரம் விளையாட்டுக் கழகம், மூர்த்தி சாரால் உருவாக்கப்பட்டது. நாங்கள் அவரிடம் பயிற்சி பெற்று, தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளோம். தற்போது, அவரும், நானும், மற்றொரு பயிற்சியாளரும் இணைந்து வீரர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம். எங்கள் கழகத்தில் இருந்து இன்னும் பல வீரர்களை உருவாக்குவோம்" என்று கூறினார்.

*நாரணம்மாள்புரம் கழக நிறுவனர் சுந்தரமூர்த்தி கருத்து *

நாரணம்மாள்புரம் விளையாட்டுக் கழகத்தின் நிறுவனரும், பயிற்சியாளருமான சுந்தரமூர்த்தி பேசுகையில், "2007 ஆம் ஆண்டு இந்த கிராமத்தில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியைத் தொடங்கியபோது, இங்கு விளையாட்டு போட்டிகளில் மக்களிடத்தில் பெரிய ஆர்வம் இல்லை. இதனால், குழந்தைகளை ஊக்குவித்து, அவர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கினேன். அப்போது, நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மகேஷ், இன்று தேசிய அளவில் பதக்கம் வென்று, ஒரு பயிற்சியாளராக வளர்ந்து நிற்பது பெருமையாக உள்ளது. எங்களது கிராமத்தில் இருந்து பல திறமையான வீரர்களை உருவாக்கி, இந்தியாவிற்குப் பெருமை சேர்ப்பதே எங்களது நோக்கம். இந்த வெற்றி ஒரு ஆரம்பம் தான், நிச்சயமாக ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வோம்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

More News >>