தூத்துக்குடி சிவாந்தாகுளத்தில் 24 மணி நேரமும் மது சப்ளை செய்யும் பார் : மதுவிலக்கு அலுவலகம் அருகேயே விற்பனை படுஜோர்
தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையில் மற்றும் மதுபான கூடத்தில் 24 மணி நேரமும் கள்ளச் சந்தையில் மது விற்கப்படுவதாகவும், மதுபான கூட்டத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகம் இருந்தும் மது விற்பனை படுஜோராக நடக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி சிவந்தகுளம் பகுதியில் அரசு மதுபான கடை மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடம் குடியிருப்பு பகுதியில் செயல்படுகிறது இந்த நிலையில் இந்த அரசு மதுபான கடை மற்றும் அரசு மதுபான கூட்டத்தில் 24 மணி நேரமும் கள்ள சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது . 24 மணி நேரமும் மது கிடைப்பதால், அந்த பகுதியில் எப்போதும் மது பிரியர்கள் சுற்றி வருகின்றனர். குடியிருப்புவாசிகளுக்கும் தொல்லை தருகின்றனர்.
மேலும் இந்த மதுபானக்கூடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் தான் தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கள்ள சந்தையில் மது விற்பனை செய்யப்பட்டு வருவது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் கூறுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு மதுபான கடை மற்றும் மதுபான கூடத்தை குடியிருப்பு இல்லாத வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.