ஹெட்போனில் பாட்டு கேட்டபடி தூங்கிய பெண் மின்சாரம் தாக்கி பலி
சென்னையில், செல்போன் மூலம் காதில் ஹெட்போன் மாட்டியபடி பாட்டுக் கேட்டுக் கொண்டே தூங்கிய பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை கணத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாத்திமா (45). இவர், கடந்த சனிக்கிழமை இரவு தூங்கும்போது காதில் ஹெட்போன் மாட்டியபடி பாட்டுக் கேட்டுக் கொண்டே தூங்கினார். இதைதொடர்ந்து, பாத்திமா காலையில் வெகு நேரமாகியும் எழுந்திருக்கவே இல்லை.
இதனால், சந்தேகமடைந்த கணவர் பாத்திமாவை எழுப்பினார். அப்போது, பாத்திமா மயங்கிய நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பாத்திமாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதன் பிறகு, பாத்திமாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, பிரேத பரிசோதனையில் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஹெட்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டே தூங்கியபோது அதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஹெட்போன் மாட்டிக் கொண்டே தூங்கிய பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com