தூத்துக்குடி அருகே பட்டினமருதூரில் பாண்டியர் கால சுடுமண் சிற்பம் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி அருகே பட்டினமருதூரில் 1000 ஆண்டுகள் பழமையான சுடுமண் சிற்பம், பாண்டியர் கால மீன் சின்னம் பொறிக்கப்பட்ட கல் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் அருகே பட்டினமருதூர் கிராமம் உள்ளது. இந்த கிராமம் இப்போது தமிழகத்தின் புதிய தொல்லியல் புதையல் பூமியாக உருவெடுத்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம், தமிழக சட்டப்பேரவையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், தொல்லியல் துறை சார்பில் 8 இடங்களில் புதிய அகழாய்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அவற்றில் பட்டினமருதூரும் ஒன்று. ஆனால், அரசு அறிவித்த அந்த அகழாய்வுப் பணிகள் தொடங்குவதற்கு முன்பாகவே, கிராம மக்களின் கைகளில் ஆயிரமாண்டு கால சரித்திரச் சான்றுகள் கிடைக்க தொடங்கியுள்ளது.

சமீபத்தில், இந்த கிராம மக்கள் மக்கள் கண்டெடுத்த ஒரு சுடுமண் சிற்பம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் மதிவாணன் கூறுகையில், "இந்தச் சிற்பத்தின் கலைநயம், நுட்பமான வடிவமைப்பு மற்றும் ஆபரண வேலைப்பாடுகளை வைத்துப் பார்க்கும்போது, இது குறைந்தது 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க வேண்டும். பொதுவாக, சங்க காலத்திய ஓடு வரைபடங்கள் அதிக ஆபரணங்கள் இல்லாமல் மிக எளிமையாகக் காணப்படும். ஆனால், பட்டினமருதூரில் கிடைத்த இந்தச் சிற்பம், அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, மிகுந்த கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது அக்கால மக்களின் உயர்வான அழகியல் உணர்வையும், பண்பாட்டையும் காட்டுகிறது என்றார்.

இங்கு, 9ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதன் மேற்பரப்பில், பாண்டிய வம்சத்தின் அரச முத்திரையான மீன் சின்னம் மிகத் தெளிவாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி, பாண்டியப் பேரரசின் ஒரு முக்கிய குடியிருப்புப் பகுதியாகவோ அல்லது வணிகத் தலமாகவோ விளங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் செல்வரதி பேசுகையில், தமிழக அரசு பட்டினமருதூரில் ஆய்வு நடத்தப்படும் என அறிவித்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டன. களப்பணி இன்னும் தொடங்கவில்லை. அதற்குள், அந்தப் பகுதி மக்கள்ளிடத்தில் அரிய தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. அரசு இனியும் கால தாமதம் செய்யாமல், பட்டினமருதூரில் உடனடியாக அகழாய்வைத் தொடங்க வேண்டும். அப்படி செய்தால், தமிழகத்தின் அறியப்படாத பல வரலாற்று உண்மைகள் நிச்சயம் வெளிச்சத்திற்கு வரும் என்றார்.

More News >>