மனோஜ் பாண்டியன் திமுகவில் சேர எடப்பாடிதான் காரணம் - நெல்லையில் டிடிவி கடும் தாக்கு
மனோஜ் பாண்டியன் போன்றவர்கள் திமுகவில் இணைவதற்கு எடப்பாடி பழனிசாமியின் தவறான நடவடிக்கைகளே காரணம் என்று டிடிவி தினகரன் கடுமையாகச் சாடியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், அயன் சிங்கம்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"எதையும் ஆழ்ந்து சிந்தித்துச் செயல்படும் மனோஜ் பாண்டியன், திமுகவில் இணைந்திருப்பது வருத்தமளிக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் ஆட்டத்தால் பாதிக்கப்பட்ட, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான முடிவுகளை எடுக்க நேரிடுகிறது. பழனிசாமியின் செயல்பாடுகளால் மனமுடைந்துதான் மனோஜ் பாண்டியன் திமுகவில் சேர்ந்துள்ளார். அதிமுக என்பதே இப்போது இல்லை, அது இபிஎஸ் திமுகவாக (இதிமுக) மாறிவிட்டது. இதைக் கூறினால், என் மீது தம்பி உதயகுமார் கோபப்படுகிறார். எங்கு இருந்தாலும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் தொண்டர்கள், அதிமுக ஒன்றுபட வேண்டும் என்றே விரும்புவார்கள். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை நாங்கள் விரும்பித் தொடங்கவில்லை; எங்களைத் தொடங்க வைத்ததே அவர்கள்தான். 2017-ஆம் ஆண்டிலிருந்தே உங்கள் தலையில் கொள்ளிக்கட்டையால் சொறிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டீர்கள். இப்போது, செங்கோட்டையனையும் நீக்கி, கொழுந்துவிட்டு எரியச் செய்திருக்கிறீர்கள். அதிமுகவினர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டு திரிகிறார்கள்."
கடந்த தேர்தலில் நாங்கள் எம்.எல்.ஏ., எம்.பி. ஆகவில்லை என்பது உண்மைதான். ஆனால், பல்லாயிரம் கோடிகளைச் செலவு செய்த உங்கள் ஆட்சி வந்ததா? உங்களால் எதிர்க்கட்சித் தலைவராகத்தான் ஆக முடிந்தது. ஆனால், வரும் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட எடப்பாடி பழனிசாமியால் ஆக முடியாது. தமிழ்நாட்டு மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். ஏனென்றால், நீங்கள் திருந்தப் போவதில்லை. தேர்தலுக்காகச் செலவு செய்த பணத்தில் தொழிற்சாலைகளைக் கட்டியிருந்தால், பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்திருக்கலாம்.
"அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனித்துப் போட்டியிடுவது என்பது கடைசி வாய்ப்பாகத்தான் இருக்கும். ஆனால், எங்கள் தலைமையில் கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறது. வரும் தேர்தலில் நீங்கள் எதிர்பார்க்காத ஒரு கூட்டணி அமையும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். நான் எதையும் உறுதி செய்யாமல் பேசுவதில்லை; பழனிசாமியைப் போல தொண்டர்களையோ, நிர்வாகிகளையோ ஏமாற்ற மாட்டேன். தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. மாணவர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள் எனப் பல தரப்பினரும் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனாலும், நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. அதற்கான காரணத்தை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.