களக்காட்டில் டாக்டர் மீது பாலியல் புகார் : தொழில் போட்டியில் சிக்க வைக்கப்பட்டாரா?

நெல்லை மாவட்டம் களக்காட்டில் கடந்த 40 வருடங்களாக இயங்கி வருகிறது வீமா மருத்துவமனை. இந்த மருத்துவமனையை நடத்தி வரும் மருத்துவரின் மகன் நசீர், கூடங்குளம் ESI மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். நசீரின் மனைவி மருத்துவர் என்பதால் அவர் தனது மாமனாரின் மருத்துவமனையான வீமா மருத்துவமனையை பார்த்துக் கொள்கிறார். இந்த மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் செவிலியர்களாகவும், மற்ற பிரிவுகளிலும் பணியாற்றுகின்றனர்.

24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனையில் இரவு நேரத்திலும் 20 பேர் வரை பெண் ஊழியர்கள் பணியில் உள்ளனர். 15 வருடங்கள், 10 வருடங்கள் என நீண்ட காலம் பணியாற்றக்கூடிய செவிலியர்களும் இங்கு உள்ளனர். இந்த நிலையில் , கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாக மருத்துவமனையில் செவிலியர் பணிக்கு சேர்ந்த பெண் ஒருவர் அரசு மருத்துவரான டாக்டர் . நசீர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, களக்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து புகாருக்குள்ளான தலைமறைவாகவுள்ள நசீரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் , மருத்துவர் நசீரின், டாக்டர் மனைவி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது மருத்துவமனைக்கு எதிராகவும் தன் கணவருக்கு எதிராகவும் பொய் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது . எனவே, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி சட்டரீதியான நல்ல தீர்வு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ' இது எனது மாமனார் தொடங்கிய மருத்துவமனை. இங்கு 40க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர். வீடு மற்றும் மருத்துவமனை அனைத்து இடத்திலும் சிசிடிவி கேமராக்கள் உள்ளது . இந்த மருத்துவமனையில் இதுவரை பாலியல் ரீதியான குற்றச்சாட்டு புகார்கள் வந்ததில்லை. தற்போது என் கணவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பின்னணியில் சதி உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பாக சேர்ந்த ஒரு பெண் திடீரென பாலியல் புகார் ஒன்றை என் கணவர் மீது சுமத்துகிறார். வீடு முழுக்க சிசிடிவி கண்காணிப்பில் இருக்கும் போது முகாந்திரமே இல்லாத ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார். காவல்துறையினரும் வீட்டிலிருந்து கதவை உடைத்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை எடுத்துச் சென்றுள்ளனர். தொழில் ரீதியாக எங்களுக்கு எதிரிகள் அதிகம் இருக்கின்றனர். எனவே திடீரென முளைத்த இந்த சோதனையான சூழலை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். காவல்துறையும் உரிய விசாரணை நடத்தி எங்களுக்கான நல்ல பதிலை தருவார்கள் என்று நம்புகிறோம் "' என்றார்.

வீமா மருத்துவமனையில் 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் செவிலியர் ஒருவர் கூறுடிகயில், "புகார் கூறிய பெண் எங்களுடன் தான் கடந்த மூன்று மாதமாக வேலையில் இருந்தார். நான் 8 வருடமாக பணிபுரிந்து வருகிறேன். இந்தப் பெண் கூறும் தகவல் நம்பும் படியாக இல்லை. இதற்கு முன்பு இதுபோன்று யாருக்கும் நடந்ததில்லை. எங்களுடன் இருந்த நேரத்தில் கூட டாக்டர் நசீர் குறித்து எந்த ஒரு குற்றச்சாட்டையும் எங்களிடம் தெரிவிக்கவில்லை. ஆனால் திடீரென்று காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தது, எங்களுக்கே புரியாத புதிராக உள்ளது "என்று தெரிவித்துள்ளார்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் '' அரசு மருத்துவர் மீதான பாலியல் புகார் குறித்து இரண்டு பக்கங்களிலும் உரிய விசாரணை நடத்தி வருகிறோம். குற்றம் நடந்திருப்பதற்கான சூழல் உள்ளதா ? புகாரின் உண்மை தன்மை குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்"' என்கின்றனர்.

More News >>