பெருகும் பாலியல் தொழில்: நெல்லையில் ஒரே நேரத்தில் மசாஜ் சென்டர்களில் அதிரடி சோதனை

திருநெல்வேலியில்  மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாகப் புகார் எழுந்த நிலையில்,  மாநகரக் காவல் துறையினர்  இன்று அனைத்து மசாஜ் சென்டர்களிலும்  அதிரடி சோதனை நடத்தினர். 

சமீப காலமாக திருநெல்வேலி மாநகரின் பாளையங்கோட்டை, சந்திப்பு, தச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புற்றீசல் போல மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பாக்கள் பெருகி வருகின்றன. இவற்றில் சில மையங்களில், மசாஜ் என்ற போர்வையில் சட்டவிரோதமான பாலியல் நடவடிக்கைகள் நடைபெறுவதாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்தப் புகார்களின் அடிப்படையில், மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இன்று மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து மசாஜ் சென்டர்களிலும் ஒரே நேரத்தில் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின்போது, மையங்களின் உரிமங்கள், அங்குப் பணியாற்றும் ஊழியர்களின் விவரங்கள் மற்றும் சட்டவிரோத செயல்களுக்கான ஏதேனும் தடயங்கள் உள்ளதா என காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. 

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், "பொதுமக்களிடமிருந்து தொடர் புகார்கள் வரப்பெற்றதன் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அனைத்து மையங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படும். சோதனையின் முடிவில், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மையங்கள் கண்டறியப்பட்டால், அவை உடனடியாகப் பூட்டி சீல் வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தனர்.

 

More News >>