ஆலங்குளம் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை: கடனை அடைக்க முடியாததால் விபரீதம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் பாலடியார் நகரை சேர்ந்தவர் மாரியப்பன். கூலித்தொழிலாளியான இவரது மனைவி மாரிச்செல்வி (வயது 34). இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மாரிச்செல்வி குடும்பச் செலவுக்காக மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்கியதாகவும், சமீப காலமாக அதனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் , நேற்று மதியம் குழுவில் வாங்கிய கடனை உடனடியாக செலுத்தும்படி ஊழியர் ஒருவர் மாரிச்செல்வியின் வீட்டுக்கு வந்து சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, ரூ.10 லட்சம் வரை கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், மாரிச்செல்வி மன விரக்தியில் நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இரவு 8 மணி வரையிலும் அவர் வீட்டுக்கு வரவில்லை. சந்தேகமடந்த உறவினர்கள் அந்த பகுதியில் அவரை தேடிப் பார்த்தனர். அப்போது , நெல்லையப்பபுரம் செல்லும் சாலையில் ஒரு கிணற்றின் அருகே அவரது காலனி மற்றும் கொலுசுகள் இருந்தன. உடனடியாக, உறவினர்கள் ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, ஆலங்குளம் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடிப் பார்த்தபோது மாரிச்செல்வி சடலமாக மீட்கப்பட்டார். பின்னர், அவரது உடலை தென்காசி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.