பைக் திருடர்களின் சொர்க்க பூமியாகி வரும் மேலப்பாளையம் : போலீஸ் கொர்
நெல்லை மேலப்பாளையம் ஹாமீம்புரம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் நியாஸ் (22). இவர் நெல்லை டவுணில் உள்ள ஒரு பலசரக்கு கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் கடந்த 24-ம் தேதி இரவு 9.30 மணிக்கு தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். மறுநாள் 25-ம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் வெளியே வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக்கை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் பைக் கிடைக்கவில்லை. மர்ம நபர்கள் பைக்கை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நியாஸ் மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். திருடுபோன பைக்கின் மதிப்பு ரூ. 50,000 ஆகும்.
இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில், மேலப்பாளையம் ஞானியார்அப்பாநகர் 1-வது தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் உமர் பைரோஸ்கான் (31) என்பவரின் பைக் திருடு போயுள்ளது. இவர் 24-ம் தேதி இரவு 10 மணியளவில் தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். மறுநாள் (25-ம் தேதி) வந்து பார்த்தபோது பைக்கைக் காணவில்லை. இதுகுறித்து அவர் 28-ம் தேதி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நெல்லை தியாகராஜநகரைச் சேர்ந்தவர் வீரியபெருமாள் (51) ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தற்போது கால்நடை மருத்துவக் கல்லூரியில் பாதுகாவலராக உள்ளார். இவர் கடந்த 23-ம் தேதி மதியம் 3 மணியளவில் தனது பைக்கை நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வசந்தபவன் ஹோட்டல் முன்பு நிறுத்திவிட்டு மானூர் சென்றுள்ளார். இரவு 9 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது, நிறுத்தியிருந்த இடத்தில் பைக்கை காணவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக அவர் 26-ம் தேதி போலீசில் புகார் அளித்தார்.
மேலப்பாளையம் சேவியர் காலனியைச் சேர்ந்த மெர்வின் ஜார்ஜ் (26) என்பவர் கட்டட தொழிலாளியாக உள்ளார். இவர் கடந்த ஜூலை மாதம் 6-ம் தேதி, தனது மாமாவின் பைக்கை எடுத்துச் சென்றுள்ளார். தெற்கு பைபாஸ் சாலையில் உள்ள ஃபோர்டு கார் கம்பெனிக்கு எதிரில் இரவு 8 மணியளவில் சென்றபோது பைக் பஞ்சர் ஆனது. தனது சம்பளப் பணம் ரூ. 6,000-த்தை பைக்கின் டேங்க் கவரில் வைத்துவிட்டு, மெக்கானிக்கை தேடிச் சென்றுள்ளார். சுமார் 8.30 மணியளவில் திரும்பி வந்து பார்த்தபோது, பணத்துடனும் பைக்கையும் காணவில்லை. தற்போது கடந்த அக்டோபர் 28-ம் தேதி மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் குறித்து மேலப்பாளையம் போலீசார், பிஎன்எஸ் பிரிவு 303(2)-இன் கீழ் தனித்தனியே வழக்குப்பதிவு செய்துள்ளனர். எஸ்ஐ-க்கள் அருள்செல்வன் மற்றும் முகம்மது இஸ்மாயில் ஆகியோர் இந்த வழக்குகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே காவல் நிலைய எல்லைக்குள் அடுத்தடுத்து பைக்குகள் திருடு போயிருப்பது வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.