நெல்லையில் தமிழ் அறிஞர் கா.சு.பிள்ளை 137 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
மூத்த தமிழறிஞர் உ.வே.சா வின் மாணவரும், சென்னை சட்டக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவரும் திராவிட இயக்க தலைவர்கள் பேராசிரியர் அன்பழகன், நெடுஞ்செழியன் ஆகியோரின் ஆசிரியரும் 60க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவருமான நெல்லை கா.சு. பிள்ளையின் 137 ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம அருகேயுள்ள அவரின் நினைவிடத்தில் தமிழ் இலக்கிய அமைப்புகளின் சார்பில் பாரதி முத்தமிழ் மன்ற மாவட்டச் செயலாளர் முனைவர் கவிஞர் கோ. கணபதி சுப்பிரமணியன், தமிழ் நலக் கழகத்தின் நெல்லை மாவட்ட செயலாளர் மற்றும் கலை பதிப்பகத்தின் ஆசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி, முன்னாள் மண்டல சேர்மன் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிவப்பிரகாசர் நற்பணி மன்ற துணைச்செயலாளர் கவிஞர் சு.முத்துசாமி, தென் பொதிகை எழுத்தாளர் கூட்டமைப்பு செயலாளர் தியாகராஜன், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய செயற்குழு உறுப்பினர் புன்னைச் செழியன், அகவை முதிர்ந்த தமிழறிஞர் சங்க மாநிலத் தலைவர் கவிஞர் சுப்பையா, நிழல் இலக்கிய தளம் கவிஞர் பிரபு, பாரதியார் உலகப் பொதுச் சேவை நிதிய செய்தித் தொடர்பாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.