தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் : சோதனை செய்த போதே குழாய் உடைப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.605 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் ஆகியோர் இன்று (05.11.2025) ஆய்வு மேற்கொண்டனர். திருநெல்வேலி மாவட்டத்தின் வள்ளியூர், இராதாபுரம், நாங்குநேரி, களக்காடு, சேரன்மகாதேவி மற்றும் பாளையங்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 831 ஊரகக் குடியிருப்புகளின் குடிநீர் தேவையினைப் பூர்த்தி செய்யும் நோக்கில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தின் பேரில் இந்த  திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இரண்டு மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 18 ஊராட்சிகளுக்கும், இராதாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த 27 ஊராட்சிகளுக்கும் இத்திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படவுள்ளது.

இதற்காக, முக்கூடலுக்கு அருகே தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்திலிருந்து சிங்கம்புணரியில் உள்ள பிரதான சுத்திகரிப்பு நிலையத்திற்குத் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. அங்கு 22.79 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, 9.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரதான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு ஏற்றப்படுகிறது. பின்னர், ஒழுகுசேரியில் உள்ள 6.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மற்றொரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு,  குழாய்கள் மூலம் அனைத்துக் குடியிருப்புகளுக்கும் விநியோகம் செய்யப்படவுள்ளது. பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், இந்த மாத இறுதிக்குள் பணிகளை முடித்து, குடிநீர் விநியோகத்தைத் தொடங்க அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். 

இதனிடைய சோதனை முயற்சியாக  குடிநீர்  தற்போது ராதாபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  சோதனை முயற்சியின் போதே இன்று திறக்கப்பட்ட நீர் தெற்கு வள்ளியூர் பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக வெளியேறியது. அதிகாரிகள் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

More News >>