மறு அறிவிப்பு வரும் வரை, மணிமுத்தாறு அருவிக்கு மக்கள் செல்ல தடை
திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மணிமுத்தாறு அருவி, பராமரிப்புப் பணிகள் காரணமாக தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்குச் செல்லும் வழியில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவி, ஆண்டு முழுவதும் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீரால் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் மட்டுமின்றி, தென்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
அருவிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பிகள், படிக்கட்டுகள் மற்றும் உடை மாற்றும் அறைகள் போன்ற கட்டமைப்புகள் பராமரிக்கப்படுவது வழக்கம். தற்போது, சேதமடைந்த பகுதிகளைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. குறிப்பாக, ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் பகுதிகளில் காங்கிரீட் தளங்கள் அமைப்பது, உடைந்து போன தடுப்புக் கம்பிகளைப் புதிதாக மாற்றுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, மணிமுத்தாறு அருவிக்கு செல்லவும், அருவியில் குளிக்கவும் தற்காலிமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, அருவி மீண்டும் எப்போது திறக்கப்படும் . இது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.