கடையத்தில் மற்றொருவரை காப்பாற்ற ஓடிய பெண் : மோட்டார் சைக்கிள் மோதியதில் மூளைச்சாவு
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரத்தை அடுத்த ராமலிங்கபுரம் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவரது மனைவி பார்வதி(வயது 60). இ்நத தம்பதிக்கு கார்த்திக் ராஜா(19), பலவேஸ்(16) என 2 மகன்கள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை இறந்த துக்கத்தில் அதே நாளில் கல்யாண சுந்தரமும் இறந்துவிட்டார். கணவர் மறைவுக்கு பிறகு, பார்வதி நெல் நடவு பணிக்கு சென்று தனது மகன்களை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2-ந்தேதி கடையம் அருகேயுள்ள கோவிந்தபேரி பகுதியில் நடந்த நெல் நடவு பணிக்காக பார்வதி சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் தடுமாறி விழுந்த ஒருவரை காப்பாற்ற பார்வதி ஓடியபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில், பார்வதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரை உறவினர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரது உடல்நிலை மோசமாகவே, மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் பார்வதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த பார்வதி நேற்று மதியம் மூளைச்சாவு அடைந்துவிட்டார். தொடர்ந்து , அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பார்வதியின் உறவினர்கள் முன்வந்தனர். இதையடுத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன் வழிகாட்டுதலின்பேரில் பார்வதியின் உடலில் இருந்து இதயம், சிறுநீரகம், கருவிழிகள் உள்ளிட்ட பாகங்கள் எடுக்கப்பட்டது. பின்னர் இன்று காலை மதுரை, புதுக்கோட்டையில் உள்ள மருத்துவமனைகளுக்கு உடல் பாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து, பிற்பகலில் பார்வதியின் உடல் அரசு மரியாதைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, டீன் ரேவதி பாலன் மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் பார்வதி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற சென்ற பெண், விபத்தில் சிக்கி பலியான சம்பவம் கிராமமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பார்வதியின் இரு மகன்களும் ஆதரவற்று நிற்கின்றனர். அவர்களின் வாழ்வதாரத்துக்கு அரசு உதவி புரிய வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது.