திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர் உண்ணாவிரத போராட்டம்
கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக, வழங்கிட கோரி , திருநெல்வேலியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
கல்லூரி பேராசிரியர்கள் பணி மேம்பாட்டுக்கான அரசாணை கடந்த 2021ம் ஆண்டு வெளியிடப்பட்டது அதனைத் தொடர்ந்து , அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவைத்தொகை முழுமையாக வழங்கப்பட்டு விட்டது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் 8 மண்டலங்களில் 2 மண்டலங்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. மீதமுள்ள 6 மண்டலங்களில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு பணிமேம்பாடு ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த மெத்தன போக்கை கண்டித்தும் திருநெல்வேலி பாளையங்கோட்டை பேருந்து நிலையம் எதிரில் மூட்டா அமைப்பு சார்பில் ஜோதிபுரம் திடலில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போரட்டத்துக்கு மண்டல தலைவர்கள் விஜய சேவியர் பார்த்திபன் மற்றும் ஆர்தர் டேனியல் தலைமை தாங்கினர். மூட்டா அமைப்பின் பொருளாளர் ராஜ ஜெயசேகர் தொடக்க உரையாற்றினார். மத்திய இணை பொது செயலாளர் சிவஞானம் போராட்டம் பற்றி பேசினார். மூட்டா துணை தலைவர் ராஜு, இணைப் பொது செயலாளர் ஷைலா குமாரி, நான்காம் மண்டல செயலாளர், மகேஷ், மூன்றாம் மண்டல பொருளாளர் லெனின், நான்காம் மண்டல பொருளாளர் கணேஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். உண்ணாவிரத போராட்டத்தில் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கோரிக்கைகள்:
1.உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை பணப் பலன்கள் உடனடியாக வழங்க வேண்டும்.
2.2022 க்கு பின் பணியில் சேர்ந்த பேராசிரியர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்கிட வேண்டும்
3. பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி 01.01.2016 க்கு பின் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.
4. அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகமாக மாற்றும் சட்டத் திருத்தத்தை முழுவதுமாக கைவிட வேண்டும்.