நெல்லை மாவட்டத்தில் பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு : கடைமடை பகுதியில் தண்ணீர் இல்லை
திருநெல்வேலியில் பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையிலும் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததால் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை என கூறி விவசாயிகள் நீர்வளத்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
திருநெல்வேலி மாவட்டத்தின் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து பிசான சாகுபடிக்காக கடந்த 1ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தாமிரபரணி ஆற்றின் பாசன கால்வாய்களான நதியுனி கால்வாய் , கோடை மேலழகியான் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கால்வாய்கள் மூலமாக பிசான சாகுபடிக்காக தண்ணீர் வெறியேறியது. ஆனால், பல்வேறு கால்வாய்களில் முறையாக தூர் வாரப்பவில்லை. இதனால், கடைமடைக்கும் தண்ணீர் செல்லவில்லை.
இதையடுத்து, இந்த பிரச்னை குறித்து காட்டுப்பத்து , கௌதமபுரி, பிரம்மதேசம், கோவில்குளம், முடப்பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நெல்லை நீர்வளத்துறை அலுவலகத்தில் முறையிட வந்தனர் . ஆனால் அதிகாரிகள் அங்கு இல்லாத நிலையில் , அலுவலகம் முன்பு கே.எஸ். மாரிமுத்து தலைமையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த நீர்வளத்துறை அதிகாரிகள் விவசாயிகளோடு பேச்சு வார்த்தை நடத்தி வரும் 10ம் தேதிக்குள் கடைமடைகளுக்கும் தண்ணீர் வந்து சேர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.