காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி தேர்வு
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 16ம் தேதி வெளியாகும்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வருகிறார். துணை தலைவராக ராகுல் காந்தி உள்ளார். கடந்த சில மாதங்களாக சோனியா காந்தி உடல் நலக் குறைவு காரணமாக கட்சி பணிகளில் ஈடுபடாமல் ஓய்வு எடுத்து வருகிறார். இதனால்,ராகுல்காந்தி அடுத்த தலைவர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் வரும் 16ம் தேதி என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று ராகுல்காந்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்தார். இவரை 89 பேர் முன்மொழிந்தனர்.
ராகுல் காந்திக்கு போட்டியாக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை, இதனால், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தடுக்கப்படுவது உறுதியானது. தேர்தல் அதிகாரி முல்லப்பள்ளி ராமச்சந்திரன் இதை தெரிவித்தார்.