நெல்லையில் டாஸ்மாக் கடைகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு : பெண்கள் திரளுவதால் ஆளுங்கட்சியினர் கலக்கம்

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மூன்று வெவ்வேறு இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட மற்றும் அமைக்கப்படவுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் பெண்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, நெல்லையில் திமுக தோற்றால் நிர்வாகிகளின் பதவி பறிக்கப்படும் என்று முதல்வர் எச்சரித்த நிலையில், பெண்கள் கோபம் தங்களுக்கு எதிரான வாக்குகளாக மாறி விடுமோ என்று நெல்லை மாவட்ட திமுகவினர் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பட்டன்கல்லூர் - ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் பெண்கள்

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகேயுள்ள பட்டன்கல்லூரில் இருந்து பழவூர் கிராமம் செல்லும் வழியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து,பட்டன் கல்லூர் மக்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருந்தனர். அதில், தங்கள் கிராமம் ஏற்கனவே சாதி கலவரத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட கிராமம். இங்கு புதியதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், மக்கள் குடியிருப்புகளுக்கு அருகேயுள்ளது. இதனால் இரவு நேரங்களில் டாஸ்மாக் கடைக்கும் வரும் மது பிரியர்களால் அருகில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பெண் குழந்தைகள் சுதந்திரமாக நடமாட முடியாத ஒரு சூழல் உருவாகும். மீண்டும் சாதி கலவரம் ஏற்பட கூட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, கொண்டாநகரம் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் மீண்டும் அதன் அருகிலேயே புதிய டாஸ்மாக் கடை அமைப்பதால் பொதுமக்களின் அமைதியான வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என்று கூறியிருந்தார் . அப்போது, கிராம மக்களிடத்தில், டாஸ்மாக் கடை அமைக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில் . கடந்த இரண்டு நாட்களாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை கண்டித்து, பட்டன் கல்லூர் மற்றும் பழவூர் கிராம மக்கள் இன்று நெல்லை வட்டாட்சியரை சந்தித்து தங்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை ஒப்படைப்பதற்காக வந்தனர். இதனால் , வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது தொடர்பாக கலால்துறை கோட்ட அலுவலர் கிருஷ்ணகுமாரிடம் இது குறித்து கேட்டபோது, பொது மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் அந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட கூடாது என கூறிவிட்டார். அதனால் , அந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது. வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளும் டாஸ்மாக் கடை வராது என்று மக்களிடத்தில் உறுதிபட கூறினர். இதனைத் தொடர்ந்து ஆதார், ரேஷன் கார்டு என சான்றிதழ்களை ஒப்படைக்க வந்த மக்கள், போராட்டத்தை கைவிட்டு தங்கள் கோரிக்கை மனுவை வழங்கிவிட்டு சென்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மன்னார்கோவில் - பெண்கள் போராட்டம், தள்ளுமுள்ளு*

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோவில் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பெண்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் இன்று கடையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய மதுக்கடை திறக்கப்பட்டால் இளைஞர்கள் மது அருந்துவதால் , பிரச்னைகள் ஏற்படுமென கூறி, கடையை உடனடியாக மூடுமாறு வலியுறுத்தினர். கடையின் படிக்கட்டுகளில் அமர்ந்து நீண்ட நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தினர் மற்றும் பெண்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அப்பாது, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. பின்னர், போலீசார் சுமார் 25 பெண்கள், 15 ஆண்கள் உட்பட மொத்தம் 40 பேரை கைது செய்து, அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

* புதுக்குறிச்சி - சாலை மறியலால் போக்குவரத்து ஸ்தம்பித்தது*

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகா, புதுக்குறிச்சி கிராமம் அருகே புதிதாக அரசு மதுபானக் கடை (டாஸ்மாக்) திறக்கப்பட்டதைக் கண்டித்து, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் இன்று மாலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், மூலக்கரைப்பட்டி - திருநெல்வேலி சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

மூலக்கரைப்பட்டி - திருநெல்வேலி பிரதான சாலையில், அரசு மதுபானக் கடை எண் 10812 நேற்று (நவம்பர் 6) முதல் செயல்படத் தொடங்கியது. குடியிருப்புப் பகுதிக்கு அருகே இந்த மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளதற்கு அப்பகுதி மக்கள், குறிப்பாக பெண்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த கடையை அகற்றக் கோரி, புதுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 45-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மாலை 5 மணியளவில் திரண்டனர். அவர்கள் அனைவரும் மூலக்கரைப்பட்டி - திருநெல்வேலி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தச் சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மூன்றடைப்பு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொதுமக்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகளின் சமாதானப் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து, கடையை மூடும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என அவர்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பெண்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

*பெருகிவரும் பெண்களின் எதிர்ப்பு*

ஒரே நாளில் மூன்று வெவ்வேறு இடங்களில், பெண்கள் தங்களின் குடும்ப அட்டைகளையும், அடையாள அட்டைகளையும் துறக்கத் துணிந்தும், கைதுக்கும், தடியடிக்கும் அஞ்சாமலும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெண்கள் களமிறங்கியுள்ளது, மதுபானக் கடைகளுக்கு எதிரான எதிர்ப்பு எந்த அளவிற்கு வலுப்பெற்றுள்ளது என்பதையே காட்டுகிறது. இது, நெல்லை மாவட்டத்தில் திமுகவுக்கு எதிரான வாக்குகளாகவும் மாறி விட கூடும். இதனால், ஆளும் கட்சியின் நெல்லை மாவட்டம் பெரும் தலைகள் கலக்கத்தில் உள்ளனர்.

More News >>