இந்த கவுன்சிலர் எங்களுக்கு தேவையில்லை -குடிநீர் பிரச்னையால் மேலப்பாளையம் மக்கள் அதிரடி
கடந்த நான்கு ஆண்டுகளாக சீரான குடிநீர் வழங்காததை கண்டித்து மேலப்பாளையத்தில் பெண்கள் மாநகராட்சியையும், திமுக கவுன்சிலரையும் கண்டித்து திடிரென தெருவில் இறங்கி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட 45 வது வார்டு இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு கல்வெட்டு நாயகன் தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கடந்த நான்கு ஆண்டுகளாக குடிநீர் ஒழுங்காக வருவதில்லை. குடிநீர் வந்தாலும் சாக்கடை கலந்து வருகிறது. இதனால் ,ஏராளமான மக்கள் வைரஸ் காய்ச்சல், மஞ்சள் காமாலை போனற நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, இன்று ( நவ.8)பொதுமக்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பெண்கள் கலங்களான குடிநீர் பாட்டிலை கையில் ஏந்தியிருந்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது,
இந்த வார்டின் திமுகவை சேர்ந்த கவுன்சிலர் தான் மண்டல சேர்மனாக உள்ளார். வார்டுக்கு வந்தது கிடையாது. அதிகாரிகள் வரும்போது மட்டும் தான் வருகிறார். பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுடைய பகுதி சார்பில் மூன்று கோரிக்கைகளை வைத்துள்ளோம். சீரான குடிநீர் வழங்க வேண்டும், சிமெண்ட் சாலையை அகற்றி தார் சாலை அமைக்க வேண்டும், தரமான குடிநீர் குழாய் பதித்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு ஆண்டுகளாக மனு கொடுத்து வந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தரமான சுகாதாரமான குடிநீர் மாநகராட்சியால் வழங்க முடியவில்லை. ஆனால் குடிநீர் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து திமுக கவுன்சிலரும், மண்டல சேர்மனுமான கதீஜா இக்லாம் பாஸிலாவிடம் பலமுறை முறையிட்டும் குறைகளை நிவர்த்தி செய்யவில்லை. எனவே, இன்று தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தொடர்ந்து , எங்களுடைய அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனறால், கவுன்சிலர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். இந்த கவுன்சிலர் எங்களுக்கு தேவையில்லை.' என்று ஆவேசமாக தெரிவித்தனர்.
இது குறித்து கவுன்சிலர் கதீஜாவிடம் பேசிய போது, வரும் 10ம் தேதி அந்த பகுதியிலுள்ள அனைத்து வீடுகளின் குடிநீர் இணைப்பும் பகிர்மான குழாயுடன் இணைக்கப்படவுள்ளது. இதை, செய்து விட்டால், இந்த பிரச்னை தீர்ந்து விடும். சிமெண்ட் ரோடை பெயர்த்து விட்டு தார்சாலை அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டு விட்டது. அந்த பணிகள் விரைவில் நடக்கும் .
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.